

சென்னை,
தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, உயிர்களைக் காக்கும் உயரிய பணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மருத்துவர்களுக்கு நாடு முழுவதும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ஆம் தேதி கொண்டாடப்படும் இந்நாள், மருத்துவத் துறையின் மகத்தான சேவையையும் சமூக நலனுக்கான அவர்களின் பங்களிப்பையும் நினைவுகூரும் நாளாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”மருத்துவர்கள் கடவுளுக்கும் மேலானவர்கள்: அவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும்!
உயிர்காக்கும் கடவுள்களான மருத்துவர்களின் சேவையை போற்றும் வகையில், தேசிய மருத்துவர்கள் நாள் இன்று கொண்டாடப்படுகிறது. மருத்துவராக பணி செய்து மேற்கு வங்க முதலமைச்சராக உயர்ந்த பி.சி.ராய் அவர்களின் பிறந்தநாள் தான் தேசிய மருத்துவர் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அனைத்து மருத்துவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவர்களின் சேவை மகத்தானது. மனித உயிர்களை காக்கும் பணி கடவுளுக்கும் மேலானது. அத்தகைய புனிதப் பணியை செய்து மருத்துவர்கள் மாண்புடன் நடத்தப்பட வேண்டும். அவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.