

சென்னை,
திமுக சட்டத்துறை இணைச் செயலாளரும், மதுராந்தகம் வேட்பாளருமான பரந்தாமன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
வெளிக்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலை உருவாக்கி, தனக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கச் செய்யும் முயற்சியைத்தான் விஜய் செய்து வருகிறார். முதல்-அமைச்சரின் நாற்காலியில் உள்ள நான்கு கால்களுமே ஊழல் கால்கள்தான்.
த.வெ.க ஆட்சியே குதிரைபேர ஆட்சிதான் என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் கூறி வருகின்றன. அடுத்த கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி இடைத்தேர்தலை வரவைத்து தனது பெரும்பான்மையை நிரூபிக்க நினைக்கிறார் விஜய். இந்த லட்சணத்தில் இவர் லஞ்சத்தையும் ஊழலையும் ஒழித்துவிட்டதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்.
குதிரைபேரம் மூலம் விஜய் ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கியிருக்கிறார். இதில் விஜய்யை ஏ-1 குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும். காவல்துறையினர் கண்மூடி இருக்காதீர்கள்; மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். நீங்கள் இதில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தி.மு.க சட்டத்துறை சும்மா இருக்காது.
உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றிபெற்ற ம.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யச்சொல்லி வற்புறுத்தியுள்ளனர். முதல்-அமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, வைகோ, துரை வைகோ ஆகிய நான்கு பேரும் கூட்டுச்சதி செய்வதாகவும், எங்களை ராஜினாமா செய்ய வற்புறுத்தியதாகவும் ம.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களே லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளனர்.
குதிரைபேரம் குறித்து நேரடியாகவே இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் புகார் கொடுத்துள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கையில்தான் இருக்கிறது. இதில் லஞ்ச ஒழிப்புத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தி.மு.க சட்டப் போராட்டம் நடத்தும். இவ்வாறு அவர் கூறினார்.