தமிழகத்தில் அனைத்து மகளிரும் ஒன்றிணைந்து சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு சம்மட்டி அடி கொடுப்பார்கள்: டிடிவி தினகரன்

வானில் பறக்கும் விமானத்திலும் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியது தான் தி.மு.க.வின் சாதனைகளின் நீட்சி என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அனைத்து மகளிரும் ஒன்றிணைந்து சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு சம்மட்டி அடி கொடுப்பார்கள்: டிடிவி தினகரன்
Published on

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

விமானப் பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாக தி.மு.க. கவுன்சிலர் கைது- வானில் பறக்கும் விமானத்திலும் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியது தான் தி.மு.க.வின் சாதனைகளின் நீட்சி...

விமானப் பணிப்பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாக திருவள்ளூர் நகராட்சியின் தி.மு.க. கவுன்சிலர் பிரபாகரன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

கிருஷ்ணகிரி அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பாக இரண்டரை வயது பச்சிளம் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் தி.மு.க. நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், பறக்கும் விமானத்தில் அரங்கேறியிருக்கும் மற்றுமொரு பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தி.மு.க.வினரை பார்த்தாலே பெண்கள் அச்சப்படும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.

தமிழகம், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என மேடைக்கு மேடை மார்தட்டிக் கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச் சம்பவங்களுக்கு காரணமே பெரும்பாலான தி.மு.க.வினர் தான் என்பது தெரியுமா? தெரியாதது போல நடிக்கிறாரா?

எனவே, பெண்களை போகப் பொருட்களாக மட்டுமே பார்க்கும் தி.மு.க.வினரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக ஒடுக்கத் தவறினால், தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிரும் ஒன்றிணைந்து வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு சம்மட்டி அடி கொடுப்பார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com