தவெகவுடன் கூட்டணி; டாக்டர் ராமதாஸ் புதிய வியூகம்

தனித்து போட்டியிடுவதைவிட, பலத்தை நிரூபிக்கும் வகையில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதே நல்லது என்று நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தவெகவுடன் கூட்டணி; டாக்டர் ராமதாஸ் புதிய வியூகம்
Published on

சென்னை,

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் திமுக அல்லது அதிமுக கூட்டணியில் டாக்டர் ராமதாஸ் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரு கட்சிகளுடனும் பேச்சு வார்த்தையில் இழுபறி நிலை நீடித்ததால், இன்னும் கூட்டணி முடிவாகவில்லை.

தமிழ்நாட்டில், டாக்டர் ராமதாஸ், புதிய தமிழர் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் மட்டுமே இன்னும் முடிவை அறிவிக்காமல் உள்ளனர். இந்த நிலையில், காத்திருந்தும் பலன் இல்லை என்பதை புரிந்துகொண்ட டாக்டர் ராமதாஸ், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில், கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, செயல் தலைவர் ஸ்ரீ காந்தி, அருள் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிர்வாகிகள் மத்தியில் பேசிய டாக்டர் ராமதாஸ், "நடிகர் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்கலாமா?" என்று கருத்து கேட்டார். பெரும்பாலான நிர்வாகிகள், "தனித்து போட்டியிடுவதைவிட, பலத்தை நிரூபிக்கும் வகையில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதே நல்லது" என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், டாக்டர் ராமதாசும் தவெகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கலாமா? என யோசித்து வருகிறார். தமிழகத்தின் வடமாவட்டங்களில் பாமகவுக்கு செல்வாக்குள்ள 35 தொகுதிகளை கேட்டு பெற்று போட்டியிடுவதன் மூலம் சரிந்த செல்வாக்கை மீட்பதுடன் அன்புமணிக்கும் பாடம் புகட்டலாம் என்று டாக்டர் ராமதாஸ் கருதுகிறாராம்.

இதற்கிடையே, பாமக தொடர்பாக டாக்டர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வரும் 9-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. அதில், அன்புமணி தரப்பும், தேர்தல் கமிஷனும் விளக்கம் அளிக்க உள்ளன. எனவே, அதுவரை பொறுத்திருந்து பார்த்துவிட்டு, அதன்பிறகு முடிவை அறிவிக்கலாம் என டாக்டர் ராமதாஸ் காத்திருக்கிறாராம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com