

சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், அனைத்து தனியார் மருத்துவமனைகளும், 50 சதவீதம் படுக்கைகளை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணை தலைவர் ராஜா கூறியதாவது:-
சாதாரண 2-ம் நிலை சிறிய மருத்துவமனைகளில் மொத்தமாக 50 முதல் 60 படுக்கைகள் மட்டும் இருக்கும். அதுவும் ஒரே கட்டிடத்தில்தான் அமைந்திருக்கும். அதனால் இந்த மருத்துவமனைகளில் 50 சதவீதம் கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்குவது என்பது சாத்தியமில்லாதது.
எல்லா மருத்துவமனைகளுக்கும் கொரோனா சிகிச்சை அளிக்க 50 சதவீத படுக்கைகள் என்பது, வீண் குழப்பங்களுக்கும், தேவையில்லாத நோய் பரவலுக்கும் வழிவகுக்கும். எனவே அரசு இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதேவேளையில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்பதை அரசு நிர்ணயித்துள்ளது.
அந்த கட்டணம் போதுமானதாக இல்லை. அதனையும் அரசு மறுபரிசீலனை செய்து, கட்டணத்தை உயர்த்தி வழங்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.