வேளச்சேரியில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் செயல்பட அனுமதி: எஸ்டிபிஐ கட்சி கண்டனம்

அதை வாயளவில் எதிர்ப்பதாக காட்டிவிட்டு, நடைமுறையில் அதே கொள்கையின் கூறுகளை அனுமதிப்பது அரசின் தெளிவற்ற இரட்டை நிலைப்பாட்டையே வெளிப்படுத்துகிறது.
எஸ்டிபிஐ கட்சி
Published on: 

சென்னை,

புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறிவிட்டு அதன் கூறுகளை படிப்படியாக அனுமதிப்பது ஏற்புடையதல்ல என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம்

சென்னையில் வேளச்சேரி பகுதியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 'யுனிவர்சிட்டி ஆஃப் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா - UWA' தனது நேரடி வளாகத்தை அமைத்து செயல்படுவதற்கு தமிழ்நாடு அரசும், பல்கலைக்கழக மானியக் குழுவும் (UGC) ஒப்புதல் அளித்திருப்பது கண்டனத்திற்குரியது.

கல்வி என்பது சமூக மாற்றத்திற்கான அடிப்படை உரிமையே தவிர, அது பன்னாட்டு வணிக நிறுவனங்களின் லாப வேட்டைக்கான சந்தை அல்ல. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் பொதுக்கல்வி கட்டமைப்பை சீர்குலைக்கும் வகையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேசிய கல்விக்கொள்கை

மத்திய அரசின் 'புதிய தேசிய கல்விக்கொள்கை 2020'-ஐ தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று கொள்கை பிரகடனம் வெளியிட்டுவிட்டு, தற்போது அதே கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களை ஒவ்வொன்றாக படிப்படியாக நடைமுறைப்படுத்துவதும் அதற்குத் துணைபோவதும் முற்றிலும் ஏற்புடையதல்ல. புதிய கல்வி கொள்கையின் மிக ஆபத்தான அம்சமே கல்வியை தனியார்மயமாக்கி, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பதுதான். அதை வாயளவில் எதிர்ப்பதாகக் காட்டிவிட்டு, நடைமுறையில் அதே கொள்கையின் கூறுகளை அனுமதிப்பது அரசின் தெளிவற்ற இரட்டை நிலைப்பாட்டையே வெளிப்படுத்துகிறது.

இத்தகைய வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டால், அவை பெரும் கல்வி கட்டணத்தை நிர்ணயித்து வசதிபடைத்தோருக்கான உயர்தட்டு வளாகங்களாக மட்டுமே மாறும். இதனால் ஏழை, எளிய, நடுத்தர மற்றும் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்குக் கல்வி எட்டாக்கனியாகி, சமூகநீதி மற்றும் இடஒதுக்கீட்டுக் கொள்கை முற்றிலுமாக புறக்கணிக்கப்படும் சூழல் உருவாகும். அரசு பல்கலைக்கழகங்கள் போதிய நிதி மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளின்றி இருக்கும் சூழலில், அவற்றுக்கு முன்னுரிமை அளிக்காமல் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி தருவது எளிய மாணவர்களின் கல்வி உரிமையை அடகு வைப்பதற்கு சமமாகும்.

வலியுறுத்தல்

எனவே, மாணவர்களின் நலன், சமூகநீதி மற்றும் தமிழ்நாட்டின் எதிர்கால கல்விக்கட்டமைப்பு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, வெளிநாட்டு பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை தமிழ்நாடு அரசு எந்தவித சமரசமும் இன்றி உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com