அமைச்சரவையில் பெண்களுக்கு முக்கியத்துவம்: த.வெ.க. அரசுக்கு அண்ணாமலை பாராட்டு

உள்ளாட்சி தேர்தலில் அதிகளவில் பெண்களை போட்டியிட வைக்க வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் பெண்களுக்கு முக்கியத்துவம்: த.வெ.க. அரசுக்கு அண்ணாமலை பாராட்டு
Published on: 

சென்னை,

த.வெ.க. அரசு, அமைச்சரவையில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.

சாதனை பெண்களுக்கு விருது

'வீ த லீடர்ஸ்' அமைப்பின் சார்பில் மகளிர் அதிகாரமளிப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெடுப்பின் முதல் நிகழ்ச்சி காமராஜர் நினைவு தினத்தையொட்டி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி, சாதனை பெண்களான வில்லிசை கலைஞர் மாதவி, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முத்தமிழ் செல்வி, கர்நாடக இசை வயலின் கலைஞர் சி.எஸ்.சின்மயி, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு சேவை செய்து வரும் பாத்திமா, யோகாவில் கின்னஸ் சாதனை படைத்த புனிதவள்ளி உள்ளிட்ட 10 பேருக்கு காமராஜர் விருது வழங்கி கவுரவித்தார்.

பாலியல் வன்கொடுமை

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு, கடத்தல் வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் எத்தனை பெண்கள் அரசியலில் சாதித்து உள்ளார்கள் என்பதை பார்க்க வேண்டியது உள்ளது. இதுவும், நமது இலக்கு. அடுத்து நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிகளவில் பெண்களை போட்டியிட வைக்க வேண்டும். சட்டமன்ற தேர்தலில் போட்டி போட வேண்டும்.

த.வெ.க. அரசுக்கு பாராட்டு

கடந்த காலங்களில் அமைச்சரவையில் மிக குறைந்த எண்ணிக்கையிலே பெண்கள் இடம் பெற்றனர். த.வெ.க. அரசு அமைச்சரவையில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. இது கட்சி, சித்தாந்தம் தாண்டி பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

தமிழகத்தில் 12,525 ஊராட்சி தலைவர்கள் நமது வசம் இருக்க வேண்டும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மக்களுக்கு என்ன செய்யப்போகிறோம் என்பதை உறுதிமொழியாக கொடுப்போம். இதை ஓராண்டில் செய்து முடிக்கவில்லை என்றால் ராஜினாமா கடிதம் கொடுக்கிறோம் என உறுதி கொடுப்போம். அப்படிப்பட்ட அரசியலை நோக்கி நாம் செல்வோம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், நிர்வாகிகள் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம், சி.ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com