வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 13 பவுன் தங்க நகைகள் கொள்ளை

திருவண்ணாமலை அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 13 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை வேங்கிக்கால் இடுக்கு பிள்ளையார் கோவில் 6-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் மணி என்பவரது மனைவி புஷ்பா (72 வயது). இவர் தனது மகன், மருமகள், பேரக்குழந்தைகள் ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை புஷ்பா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது திடீரென வீட்டிற்குள் வந்த 2 மர்ம நபர்கள் புஷ்பாவை தாக்கி மிரட்டி அவரது கழுத்தில் இருந்த 10 பவுன் மதிப்புள்ள 3 பட்டை செயின், ¾ பவுன் கம்மல், 3 பவுன் வளையல், ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் பழைய செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

காயமடைந்த மூதாட்டி திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அவர்கள் இருவரும் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதில் முகத்தில் காயம் அடைந்த புஷ்பா அவரது மகனுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com