இதுவரை இல்லாத அளவில்.. விஜய் தலைமையிலான அரசில் 8 பட்டியலின அமைச்சர்கள்

த.வெ.க. சார்பில் 8 பேர் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இடம்பெற்றிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதுவரை இல்லாத அளவில்.. விஜய் தலைமையிலான அரசில் 8 பட்டியலின அமைச்சர்கள்
Published on

சென்னை,

கடந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க.வுக்கு 108 இடங்கள் கிடைத்தது. இருந்தபோதும் பெரும்பான்மை இல்லாததால், அந்த கட்சியால் உடனடியாக ஆட்சி அமைக்க இயலவில்லை. எனவே தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் மற்றும் கூட்டணியில் தொடரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்.) ஆகிய கட்சிகள் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்தன.

அதைத்தொடர்ந்து கடந்த 10-ந்தேதி முதல்-அமைச்சராக விஜய் பதவி ஏற்றார். அவருடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கம் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் உள்பட மொத்தம் 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பு ஏற்றுக்கொண்டனர்.

இந்த சூழலில் இன்றும் (வெள்ளிக்கிழமை) அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ஷாஜகான், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அரசும் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இதில் ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலத்துறையும், வன்னி அரசுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையும் ஒதுக்கப்பட்டது.

தமிழ்நாடு அமைச்சரவையில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக 8 பட்டியலின எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சராக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அமைச்சரவையில், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் பொதுவாக 3 முதல் 4 அமைச்சர்கள் என்ற அளவில் மட்டுமே இருந்து வந்துள்ளனர்.

தமிழ்நாடு வரலாற்றில், காங்கிரஸ் அமைச்சரவையில் முதல் பட்டியலின அமைச்சராக பி. கக்கனும், தி.மு.க.வில் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி அமைச்சரவையில் சத்தியவாணி முத்துவும் இடம்பெற்றிருந்தனர். கடந்த தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களாக மதிவேந்தன், கோவி. செழியன், சி.வி. கணேசன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு அமைச்சரவை வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதல்-அமைச்சருமான விஜய்யின் தலைமையில் பட்டியலினத்தைச் சேர்ந்த 8 பேர் அமைச்சர்களாக இடம்பெற்றுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், எழும்பூர் தனித்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த ராஜ்மோகன் கடந்த மே 10 ம் தேதி அமைச்சராகப் பதவியேற்றிருந்தார். அவருக்கு தமிழக பள்ளி கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவரைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தனித்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் பேரவைத் தலைவரும் அதிமுக மூத்த நிர்வாகியுமான தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன், மத்திய அமைச்சர் எல்.முருகனை அவிநாசியில் தோற்கடித்த இளம் எம்.எல்.ஏ. கமலி, ஓட்டப்பிடாரம் தனி தொகுதியில் வெற்றி பெற்ற மதன் ராஜா, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை தோற்கடித்த தென்னரசு, அரக்கோணம் தொகுதியில் வெற்றி பெற்ற காந்திராஜ் மற்றும் காங்கிரஸ் சார்பில் மேலூர் பொதுத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஸ்வநாதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

1967-ம் ஆண்டு முதல்முறையாக ஆட்சிக்கு வந்த தி.மு.க. அமைச்சரவையில் அன்றுமுதல் இன்றுவரை இதுவரை ஏழு  பேர் மட்டுமே இடம்பெற்றிருந்த நிலையில், அதில் நான்கு பேர் ஆதிதிராவிடர் நலத்துறையில் பணியாற்றியிருந்தனர். முதல்முறையாக ஆட்சியமைத்துள்ள முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 8 பேர் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இடம்பெற்றிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பட்டியல் சமூகத்தை சேர்ந்த 8 அமைச்சர்கள் யார், யார்..?

எழும்பூர் (தனி) ராஜ்மோகன், அவிநாசி (தனி) கமலி, அரக்கோணம் (தனி) காந்திராஜ், ஒட்டப்பிடாரம் (தனி) மதன், ராசிபுரம் (தனி) லோகேஷ், ஸ்ரீபெரும்புதூர் (தனி) தென்னரசு, திண்டிவனம் (தனி) வி,சி,க, எம்,எல்,ஏ, வன்னிஅரசு, பொதுத்தொகுதியில் வென்ற காங். எம்,எல்,ஏ, விஸ்வநாதன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com