அன்பில் மகேஷ் மீதான ரூ.400 கோடி லஞ்ச வழக்கு: தலைமறைவாக இருந்த டிரைவர் கோர்ட்டில் சரண்

தலைமறைவாக இருந்த டிரைவர் சரவணன் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு நீதிபதி முன்பு சரணடைந்தார்.
அன்பில் மகேஷ் மீதான ரூ.400 கோடி லஞ்ச வழக்கு: தலைமறைவாக இருந்த டிரைவர் கோர்ட்டில் சரண்
Published on: 

சென்னை,

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வாங்கித் தருவதாக ரூ.400 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கார் டிரைவர் சரவணன் கோர்ட்டில் சரணடைந்துள்ளார்.

ரூ.400 கோடி ஊழல் வழக்கு

திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.400 கோடி வரை முறைகேடாக பணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகி பி.டி. அரசகுமார், முன்னாள் எம்.எல்.ஏ முத்துக்குமார் உள்ளிட்டோர் மீது முதலில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், பின்னர் விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் குற்றம்சாட்டப்பட்ட நபராகச் சேர்க்கப்பட்டார்.

கைது

பி.டி.அரசகுமார் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் ஆகியோர், தனியார் பள்ளிகளிடம் இருந்து பணம் வசூலித்து, அன்பில் மகேசுக்கு கட்சி நிதி என்ற பெயரில் லஞ்சமாக வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அன்பில் மகேஷ், முத்துக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

ஜாமீன் மனு தள்ளுபடி

இந்த வழக்கில் ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனுவை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு நேற்று விசாரித்தது. அப்போது அன்பில் மகேஷ் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதாக கூறி ஜாமீன் மனுவை சிறப்பு கோர்ட்டு நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கோர்ட்டில் சரண்

இந்த நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முத்துக்குமாரின் டிரைவர் சரவணன் கோர்ட்டில் சரணடைந்துள்ளார். பள்ளிகளிடம் முத்துக்குமார் வசூலிக்கும் பணத்தை அவரது டிரைவர் சரவணன், அன்பில் மகேஷ் வீட்டுக்கு கொண்டு சென்று கொடுத்ததாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடி வந்த நிலையில் தலைமறைவாக இருந்தார்.

நீதிமன்ற காவல்

சரவணனை கைது செய்யும் வரை அன்பில் மகேசுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று போலீசார் தரப்பில் நேற்று கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த டிரைவர் சரவணன் இன்று சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு நீதிபதி முன்பு சரணடைந்துள்ளார். அவர் ஏற்கெனவே 6-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை 25-ம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

X