வழக்கு ரத்து கோரிய அன்பில் மகேஷ்: விசாரணையை நவ.,10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது ஐகோர்ட்டு

அரசியல் சாசனத்துக்கு விரோதமாக போலீசார் நடந்து கொண்டதாக அன்பில் மகேஷ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
வழக்கு ரத்து கோரிய அன்பில் மகேஷ்: விசாரணையை நவ.,10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது ஐகோர்ட்டு
Published on: 

சென்னை,

தன் மீதான வழக்கினை ரத்து செய்யக் கோரி அன்பில் மகேஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையை, நவம்பர் 10ஆம் தேதிக்கு சென்னை ஐகோர்ட்டு ஒத்தி வைத்தது.

புழல் சிறையில்

கடந்த தி.மு.க. ஆட்சியின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அன்பில் மகேஷை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வரும் நவம்பர் 6-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதி உத்தரவையடுத்து இரவோடு இரவாக அன்பில் மகேஷ் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். முதல் வகுப்பு சிறையில் அன்பில் மகேஷ் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் சரண்

இந்த சூழலில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் ஆஜாரன தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், ‘மனுதாரர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகுமார் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்திருக்கிறார்’ என தெரிவித்தார்.

புகார்

அன்பில் மகேஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், அன்பில் மகேசின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தபோது, 40-க்கும் மேற்பட்ட போலீசார், தனது அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அன்பில் மகேஷை கைது செய்துள்ளனர் என புகார் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் போலீஸ் ராஜ்ஜியம் நடக்கிறதா? அரசியல் சாசனத்துக்கு விரோதமாக போலீசார் நடந்து கொண்டுள்ளனர் என குற்றம்சாட்டினார்.

நவம்பர் 10-ம் தேதி

அதற்கு காவல் துறை தரப்பில், மூத்த வழக்கறிஞர் அலுவலகத்தின் வெளியே ஒன்றரை மணி காத்திருந்துதான் அன்பில் மகேஷை கைது செய்தோம். வழக்கறிஞரின் அலுவலகத்தினுள் கைது செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், வழக்கை ரத்து செய்யக் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நவம்பர் 10-ம் தேதிக்கு நீதிபதி லட்சுமிநாராயணன் ஒத்திவைத்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com