திமுகவை பற்றி பேச அன்புமணிக்கு தகுதி இருக்கிறதா? - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேள்வி

பாமகவை மீட்க வேண்டும் என்றுதான் அன்புமணி நடைபயணம் மேற்கொள்கிறார் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
கடலூர்,
கடலூர் அருகே வெள்ளக்கரை சாத்தங்குப்பத்தில் நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் வேளாண்மைதுறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது:-
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களுக்கு என்ன செய்தார் என்று கேள்வி எழுப்புகிறார். தந்தையிடம் இருந்து பாமகவை மீட்க வேண்டும் என்று தான் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொள்கிறார். மு.க.ஸ்டாலினிடம் இருந்து ஆட்சியை மீட்பதற்கு அல்ல.
எங்கள் ஆட்சியில் தான் இந்த பகுதியில் லட்சாதிபதியாக இருந்தவர்கள் இன்று கோடீஸ்வரராக மாறி வருகிறார்கள். இப்போது தான் அன்புமணி உரிமையை மீட்க போகிறாராம். பெற்ற பிள்ளை தந்தையை காப்பாற்ற வேண்டும். இது தான் பெற்ற பிள்ளையின் கடமை. தந்தையிடம் இருந்து கட்சியை மீட்க நடைபயணம் மேற்கொள்ளும் அன்புமணிக்கு திமுகவை பற்றி பேச தகுதி இருக்கிறதா? என்பதை உணர வேண்டும்.
எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் இட ஒதுக்கீடு போராட்டத்தின்போது 18 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகுதான் ரத்து செய்தார். ஆனால் அதிமுகவுடன் தான் கூட்டணி வைத்துள்ளார்கள். யார் இடஒதுக்கீட்டு போராட்டத்தின் போது, 21 பேரை சுட்டுக்கொன்றார்களோ, அந்த கட்சியுடன்தான் கூட்டணி வைத்தார்கள். இடஒதுக்கீடு கொடுத்த பெருமை திமுகவுக்குதான் உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.






