அன்புமணியின் பதவி செல்லாது - ஜி.கே.மணி

அன்புமணி தரப்பு முறைகேடு செய்துள்ளனர் என்று ஜி.கே. மணி கூறினார்.
சென்னை,
பாமகவில் நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், பாமக தலைவர் என குறிப்பிட்டு, தி.நகர் பாமக அலுவலகத்திற்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதம் மூலம், பாமக அன்புமணியை தலைவராக அங்கீகரித்துவிட்டது என அவரது தரப்பினர் தெரிவித்தனர்.
அதே சமயம், அன்புமணி தரப்பு மோசடி செய்து இதனை செய்ததாகவும், அவரது பதவி காலம் முடிந்துவிட்டது என்றும் கட்சி விதிப்படி தற்போது ராமதாஸ் தான் தலைவர் எனவும் அவரது தரப்பினர் தெரிவித்தனர். இதனால் பாமகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாமக விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் அக்கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே. மணி மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதன்பின்னர் ஜி.கே. மணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து பாமக தொடர்பான சில ஆவணங்களையும், தகவல்களையும் வழங்கியுள்ளோம். பாமக அலுவலகம் மாற்றப்பட்டதில் அன்புமணி தரப்பு முறைகேடு செய்துள்ளனர். அன்புமணி கட்சியின் அலுவலக முகவரி மாற்றியது மற்றும் ஓராண்டு தலைவர் பதவி நீட்டிப்பு என்று அனைத்தும் பொய்யான தகவல் அது மிகப் பெரிய முறைகேடு.
அன்புமணியின் பதவி செல்லாது என்பதில் உறுதியாக உள்ளோம். ராமதாஸ் தலைமைதான் உண்மையான பாமக என தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தோம். தேர்தல் ஆணையம் கூடுதல் தகவல் கேட்டதையடுத்து அதையும் கொடுத்துள்ளோம்.
கடந்த மே மாதம் 28ஆம் தேதியுடன் அன்புமணியின் பதவி காலம் முடிவடைந்துவிட்டது. பதவி நீட்டிப்புக்காக அன்புமணி கொடுத்த ஆவணம் தவறானது என்பதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. பாமக விவகாரத்தில் விரைவில் தேர்தல் ஆணையம் நல்ல முடிவை அறிவிக்கும். கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பாமக தலைவர் மருத்துவர் ராமதாசுக்கு மட்டுமே முழு அதிகாரம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






