சிதிலமடைந்த அன்னதான மடத்தில் பழங்கால கல்வெட்டு கண்டெடுப்பு

17 தூண்களுடன் கட்டப்பட்ட இந்த மடத்தில் தனியாக ஒரு விளக்குத்தூணும் உள்ளது.
சிதிலமடைந்த அன்னதான மடத்தில் பழங்கால கல்வெட்டு கண்டெடுப்பு
Published on: 

தென்காசி,

வாசுதேவநல்லூர் அருகே தொல்லியல் ஆய்வில் சேதமடைந்த மடத்தில் கல்வெட்டு, பழங்கால சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பழங்கால கல்வெட்டு

தென்பொதிகை ஆவணக்காப்பகத்தை சேர்ந்த தென்பொதிகைக்குடும்பர், ராவணன் பொன்னையா, குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியை மகேஷ்வரி, அன்னராஜ் பாண்டியன், ஆசிரியர் முத்துச்சாமி ஆகியோருடன் அடங்கிய குழுவினர் வாசுதேவநல்லூர் அருகே உள்ள சிந்தாமணிப்புதூர் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு நெடுஞ்சாலை அருகே உள்ள சிதைந்து போன ஒரு பழங்கால அன்னதான மடத்தில் தொல்லியல் ஆய்வு மேற்கொண்டனர். கட்டிடத்தின் உள்ளே 12 வரிகளுடன் கூடிய ஒரு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. அதில் கொல்லம் ஆண்டு 1,080 என பொறிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இணையான ஆங்கில ஆண்டு 1,905 ஆகும். இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:-

தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு, இந்த கிராமத்தை புத்தூர் என்ற சிந்தாமணிப்பேரி என்று குறிப்பிடுகிறது. சிந்தாமணிப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கடுவாயன் ராமக்குடும்பனின் மகன் பெருமாள் குடும்பன் என்பவர் இக்கல்வெட்டை பொறித்துள்ளார்.

2 சிற்பங்கள்

இக்கல்வெட்டு உள்ள மடம் தற்போது சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. 17 தூண்களுடன் கட்டப்பட்ட இந்த மடத்தில் தனியாக ஒரு விளக்குத்தூணும் உள்ளது. இரண்டு தூண்களில் ஆண் மற்றும் பெண் என பழங்கால 2 புடைப்பு சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. அவர்கள் அன்னதான மடம் கட்டி கல்வெட்டு பொறிப்பித்த பெருமாள் குடும்பனின் தந்தை கடுவாயன் ராமக்குடும்பன், தாய் இருளி என கூறப்படுகிறது.

கல்வெட்டில் பெருமாள் குடும்பன், அன்னம் கொடுக்க வேண்டும் என்றே குறிப்பிடுகிறார். காலச்சுழற்சியில் வாரிசுகளின் இடப்பெயர்வால் அன்னதானம் செய்வது நின்றுபோய், மடமும் சிதைவுற்று காட்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com