அங்கன்வாடி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

அங்கன்வாடி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டுபோனது.
அங்கன்வாடி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
Published on

பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் காலனி தெருவை சேர்ந்தவர் உதயசூரியன். இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். உதயசூரியன் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் தங்கியிருந்து சமையல் வேலை செய்து வருகிறார். கோமதி மேலப்புலியூர் அங்கன்வாடியில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் கோமதி தனது வீட்டை பூட்டி விட்டு மகன்களை அழைத்துக்கொண்டு திருச்சியில் தனது அக்காளின் மருமகளுக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். அங்கிருந்து நேற்று காலை அவர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரம், 2 பவுன் நகை திருட்டு போயிருந்தது. இது குறித்து அவர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனா. இதற்கிடையே போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com