

சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி ஜூன் 20-ல் திருச்செந்தூரில் நடந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் குறித்து திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியிருந்தார்.
தவெக நகரச் செயலாளர் செல்வம் அளித்த புகாரில் அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஆத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் இன்று காலை தள்ளுபடி செய்தது.
முன் ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு ஆய்வுக்கு சென்றபோது போலீசாரால் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அனிதா ராதாகிருஷ்ணனை அவரது காரில் இருந்து இறக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
முதல்-அமைச்சர் விஜயை அவதூறாகப் பேசியதாக தவெக நிர்வாகி அளித்த புகாரில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
ஆய்வுக்கு சென்ற சட்டமன்ற உறுப்பினரை கைது செய்வதா? மு.க.ஸ்டாலின், உதயநிதியை அவதூறாக பேசிய ஆதவ் அர்ஜுனாவை கைது செய்வார்களா? ஒருவரை விமர்சித்து பேசியதற்காக கைது செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
கரூரில் இடைத்தேர்தல் வரவுள்ளதாக மக்கள் திமுக ஆட்சியில் அவதூறு வழக்கில் யாரும் கைது செய்யப்பட்டது இல்லை. இது சர்வாதிகாரத்தின் உச்சம். இதனை சட்டரீதியாக சந்திப்போம். அராஜகத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்.
கரூர் நெரிசல் குறித்து ஆதவ் அர்ஜுனா பொய்யும் புரட்டும் பேசி உள்ளார். மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் ஆதவ் அவ்வாறு பேசியுள்ளார். ஆதவ் பேச்சு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்போகிறோம். கரூரில் 41 பேர் இறந்தபோது ஓடி சென்றவர்தான் விஜய். கரூர் நெரிசல் வழக்கில் எந்த அதிகாரியை விசாரிக்க நியமித்தோமோ அவரையே இன்று தவெக அரசு நியமித்தது. தவெக ஆட்சியில் ஆக்கபூர்வமான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. தவெகவின் அராஜகத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.