அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: ஞானசேகரனுக்கு தண்டனை விவரம் இன்று அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என்று சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: ஞானசேகரனுக்கு தண்டனை விவரம் இன்று அறிவிப்பு
Published on

சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 23-ந் தேதி இரவு மாணவி ஒருவரை அந்த பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் பாலியல் கொடுமை செய்தார். இதுகுறித்து மறுநாள் கோட்டூர்புரம் போலீசில் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்.

ஞானசேகரன் தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்பதால், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த வக்கீல் வரலட்சுமி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, ஐ.பி.எஸ். அதிகாரிகள் சினேகபிரியா, பிருந்தா, ஐமான் ஜமால் ஆகியோர் கொண்ட சிறப்பு புலன் விசாரணைக்குழுவை அமைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்கிடையில் ஞானசேகரனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள், கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். பின்னர் இந்த வழக்கு சென்னை மகளிர் கோர்ட்டுக்கு மார்ச் 7-ந் தேதி மாற்றப்பட்டது.

இந்த வழக்கின் சாட்சிகள் விசாரணை ஏப்ரல் 23-ந் தேதி முதல் தொடங்கியது. தினந்தோறும் என்ற அடிப்படையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. 75 சாட்சி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. 29 பேர் சாட்சியம் அளித்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 20-ந் தேதி முடிவடைந்தது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை 28-ந் தேதி வழங்குவதாக நீதிபதி ராஜலட்சுமி அறிவித்து இருந்தார்.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கடந்த 28-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, ஞானசேகரன் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார். மேலும் அவருக்கு என்ன தண்டனை வழங்குவது? என்பது குறித்து வருகிற ஜூன் 2-ந் தேதி (அதாவது இன்று) அறிவிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.

அதன்படி, இந்த வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. புழல் சிறையில் இருந்து ஞானசேகரன் பலத்த போலீஸ் காவலுடன் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள மகளிர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளார். ஞானசேகரனுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்ற? எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com