அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் புகார் - பேராசிரியர் கைது

பேராசிரியர் ஞானவேல் பாபு கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 4 மாணவிகள் பேராசிரியர் மீது புகார் தெரிவித்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் புகார் - பேராசிரியர் கைது
Published on

சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் நேற்று மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில் கூறி இருப்பதாவது:-

நான் அண்ணா பல்கலைக்கழகத்தில் இண்டஸ்டீரியல் என் ஜினீயரிங் இறுதி ஆண்டு சென்னையில் படித்து வருகிறேன். நான் படிக்கும் அதே கல்லூரியில் எனக்கு பாடம் நடத்தி வந்த ஆசிரியர் கடந்த 3 வருடங்களாக நேரடியாகவும் தொலைபேசியிலும் என்னிடம் தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார்.

காலப்போக்கில் அவர் என்னை மனதளவில் துன்புறுத்தினார். என் குடும்ப கஷ்டத்தை அறிந்து கொண்டு உதவி செய்ய் முன் வந்தார். எனக்கு இண்டர்ஷிப் போன்ற கல்வி உதவிகளை செய்தார். மேலும் நான் தந்தை போன்றவர் என்று கூறி பேச ஆரம்பித்து பிறகு தவறுகள் செய்ய தொடங்கினார். பாடத்திற்கு வகுப்பு எடுக்க சொன்னால் படுக்கைக்கு பாடம் எடுக்க ஆரம்பித்தார். என் உள்ளாடை விஷயங்களை பற்றி பேசினார். மேலும் பெண்களின் அந்தரங்க விஷயங்களையும் பகிருமாறு கூறியுள்ளார்.

கல்லூரியில் நடந்த பாலியல் புகார்களையும் என்னிடம் கூறி நீ இதை தெரிந்து கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார். என்னை மிரட்டி பேசுமாறு வலியுறுத்தினார். இதனால் அனைத்து இணையதளங்களிலும் தடை செய்த பின்னும் என் நண்பர்களுக்கு போன் செய்து என்னை அவரிடம் பேச சொல்லி தொல்லை கொடுத்தார்.

இன்னும் சில மாணவிகளுக்கும் இதுபோல தொல்லை கொடுத்துள்ளார். இதை பற்றி கல்லூரி நிர்வாகத்திடமும் மாணவிகள் தெரிவித்துள்ளனர். மாணவிகள் நலன் காக்க தக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

எனது சக தோழிகளும் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடமும் இதை பற்றி மனு கொடுக்க கேட்டபோது அவர்கள் தயங்குகின்றனர். எனவே மாணவ - மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விசாரிக்க கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மாணவிக்கு செல்போனிலும், நேரிலும் பாலியல் தொல்லை கொடுத்த பேராசியர் ஞானவேல் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே பேராசிரியரை கைது செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழகம் அருகே மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், திருநெல்வேலியில் பதுங்கியிருந்த பேராசிரியர் ஞானவேல் பாபுவை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் மீது கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பேராசிரியர் ஞானவேல் பாபு கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 4 மாணவிகள் பேராசிரியர் மீது புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com