பிரதமர் மோடியின் முடிவுக்காக காத்திருக்கும் அண்ணாமலை

பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை அண்ணாமலை சந்தித்தார்
பிரதமர் மோடியின் முடிவுக்காக காத்திருக்கும் அண்ணாமலை
Published on

டெல்லி,

கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை. கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய இவர் 2019ம் ஆண்டு ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், பாஜகவில் இணைந்த அண்ணாமலை 2021 முதல் 2025 வரை தமிழக பாஜக தலைவராக செயல்பட்டார்.

தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கம்

அதேவேளை, தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைந்தது. ஆனால், கூட்டணி பேச்சுவார்த்தையின்போது அதிமுகவுக்கும், அண்ணாமலைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தமிழக பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டார். புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். அதன்பின்னர், அண்ணாமலைக்கு பாஜகவில் முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் அவர் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.

டெல்லி பயணம்

இதையடுத்து, பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகி புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே, அண்ணாமலை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அவர் நேற்று பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், உள்துறை மந்திரி அமித்ஷா, பாஜக தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரை தனித்தனியே சந்தித்தார். பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்த அண்ணாமலை தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். 5 பக்கம் கொண்ட அந்த ராஜினாமா கடிதத்தில், தமிழக பாஜகவில் தான் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்ததாகவும், கட்சியின் தவறான முடிவுகள், அதிமுகவுடன் கூட்டணியை நீடித்தது போன்ற காரணங்களால் நாடாளுமன்ற தேர்தலில் 11 சதவீதமாக இருந்த பாஜக வாக்கு சதவீதம் 2026 சட்டசபை தேர்தலில் 3 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் உள்பட பல்வேறு குற்றச்சாடுகளையும் அண்ணாமலை அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜினாமா கடிதத்தை ஏற்க மறுப்பு

அதேவேளை, அண்ணாமலையின் ராஜினாமா கடிதத்தை பாஜக தலைமை ஏற்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலை தெரிவித்த குற்றச்சாடுகள் குறித்து விசாரிக்க தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை பாஜக தலைமை அழைத்துள்ளது. இதையடுத்து, நயினார் நாகேந்திரன் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அவரிடம் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள் குறித்து பாஜக தலைமை விசாரணை நடத்த உள்ளது.

பிரதமர் மோடியின் முடிவு

இந்நிலையில், கட்சியில் இருந்து ராஜினாமா செய்வது என்ற நிலைப்பாட்டில் அண்ணாமலை உறுதியாக உள்ள நிலையில் அவரசப்பட்டு ராஜினாமா முடிவை எடுக்க வேண்டாம், சற்று காத்திருங்கள் என்று பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அண்ணாமலையின் ராஜினாமா கடிதம் குறித்து பிரதமர் மோடியிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அண்ணாமலையின் ராஜினாமா குறித்து பிரதமர் மோடி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால், பிரதமர் மோடியின் இறுதி முடிவுக்காக அண்ணாமலை தொடர்ந்து டெல்லியில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, அண்ணாமலையின் ராஜினாமா ஏற்கப்பட்டதா?, பிரதமர் மோடியின் இறுதி முடிவு என்ன? என்பது குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் பாஜக தலைமை அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com