

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டு விட்டது. இதனைத்தொடர்ந்து கூட்டணி கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன
இதனிடையே தேர்தலில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பா.ஜ.கவும், காங்கிரசும் மட்டுமே இதுவரை வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்து வருகிறது. பா.ஜ.க. அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. 27 தொகுதிகள் பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த தொகுதிகளில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் யார்? என்பதை அறிவிப்பதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
பா.ஜ.க. பொறுப்பாளர் மத்திய மந்திரி பியூஸ் கோயல் தமிழகம் வந்து பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தியும், இதுவரை வேட்பாளர்பட்டியல் வெளியிடப்படவில்லை. இதுதொடர்பாக நேற்று முன்தினம் தமிழக பா.ஜ.க. மாநில அலுவலகத்தில் நடைபெற்ற மையக்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு, ஒரு தொகுதிக்கு 3 பேர் என தேர்வு செய்யப்பட்டு, அந்த பட்டியல் பா.ஜ.க. தலைமைக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக, பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து இருந்தார்.
அந்த வகையில் பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியலை எந்த நேரத்திலும் கட்சி தலைமை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் அந்த வேட்பாளர் பட்டியலில் பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் பெயர் இருக்கிறதா? அவர் எந்த தொகுதியில் போட்டியிட இருக்கிறார்? என்ற எதிர்பார்ப்பும் பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இதனிடையே கட்சி மேலிடம் அவரை மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வலியுறுத்துவதாகவும், ஆனால் அவர் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பதாகவும் பா.ஜ.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
மேலும் அவர் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து 'தீவிர பிரசாரம் செய்வேன்' என கட்சி மேலிடத்தில் தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலையின் இந்த அதிரடி முடிவால், அவரது ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.