

திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திரு விழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் நேற்று முன்தினம் மாலை கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது.
மகா தீபத்தை காண வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங் களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் நடந்து கிரிவலம் சென்றனர். மகாதீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் கடும் குளிர் மற்றும் பலத்த காற்றிலும் இன்று 3-வது நாளாக சுடர் விட்டு எரிந்து பக்தர்களுக்கு காட்சி வருகிறது. சூரிய உதயத்தின்போது தீபமலை உச்சியில் இருந்து சூரிய பகவானுக்கு ஜோதி ஸ்வரூபமாய் அண்ணாமலையார் காட்சி கொடுத்தார். இதனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பார்த்து தரிசனம் செய்தனர்.
மகா தீபக்காட்சி வருகிற 4-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து மலை உச்சியில் இருந்து மகா தீபக்கொப்பரை இறக்கப்பட்டு அதில் இருந்து எடுக்கப்படும் மை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.