மீண்டும் ரெயில்வே கட்டண உயர்வு என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல - ஓ.பன்னீர்செல்வம்

ஜூலை 1-ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்த ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
மீண்டும் ரெயில்வே கட்டண உயர்வு என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல - ஓ.பன்னீர்செல்வம்
Published on

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

ரெயில் போக்குவரத்து என்பது பொதுமக்களின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. நீண்ட தூர பயணங்களுக்கும், நீண்ட நாட்கள் சுற்றுலாத் தலங்கள் செல்வதற்கும் ரெயில் போக்குவரத்தை பொதுமக்கள், குறிப்பாக ஏழையெளிய மக்கள் பெரிதும் நம்பியுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், ஜூலை ஒன்றாம் தேதி முதல் குளிர்சாதன வகுப்பிற்கான கட்டணத்தை ஒரு கிலோ மீட்டருக்கு இரண்டு பைசாவும், சாதாரண வகுப்பிற்கான கட்டணத்தை ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பைசாவும் உயர்த்த ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் இந்த நிதியாண்டில் வருகின்ற ஒன்பது மாதங்களில் மட்டும் 700 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும், மொத்தத்தில் ஓராண்டிற்கு கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

கடந்த சில ஆண்டுகளாகவே குளிர்சாதன வகுப்பு பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாகவும், சாதாரண வகுப்பு பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதன் காரணமாகவும், மூத்த குடிமக்களுக்கான சலுகைக் கட்டணம் நிறுத்தப்பட்டதன் காரணமாகவும் ரெயில்வே நிர்வாகத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்து வருகின்ற நிலையில், மீண்டும் ரெயில்வே கட்டண உயர்வு என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.

ரெயில்வே நிர்வாகத்தின் இதுபோன்ற நடவடிக்கை காரணமாக பாதிக் கட்டணம் செலுத்த வேண்டிய மூத்தக்குடி மக்கள் முழுக் கட்டணத்தை செலுத்துகிறார்கள். சாதாரண வகுப்புகளில் செல்ல வேண்டிய ஏழையெளிய மக்கள் சாதாரண வகுப்பு பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதன் காரணமாக வேறு வழியில்லாமல் அதிக பணம் செலுத்தி குளிர்சாதன வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்கிறார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ஏற்கனவே கூடுதல் கட்டணத்தைச் செலுத்தக்கூடிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு விட்டார்கள். இந்த நிலையில் மீண்டும் ஒரு நிதிச் சுமையை பொதுமக்கள் மீது திணிப்பது நியாயமற்ற செயல்.

பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஜூலை ஒன்று முதல் உயர்த்த உத்தேசித்துள்ள ரெயில் கட்டணத்தை கைவிடவும், சாதாரண வகுப்புப் பெட்டிகளின் எண்ணிக்கையை உயர்த்தவும், மூத்த குடிமக்களுக்கான ரெயில் சலுகையை மீண்டும் அளிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com