

சென்னை.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்பதாக வந்த புகாரில் சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆவணங்கள் சரியாக இருக்கின்றனவா? முறைகேடு நடக்கிறதா என லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சுப முகூர்த்த நாட்களில் அதிக எண்ணிக்கையில் பத்திரப்பதிவுகள் நடப்பது வழக்கம். அதை கருத்தில் கொண்டு, 100 டோக்கன்கள் வழங்கப்படும் சார் பதிவகங்களில் 150 டோக்கன்களும், 200 டோக்கன்கள் வழங்கப்படும் சார் பதிவகங்களில் 300 டோக்கன்களும் வழங்கப்படும். இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால், பல சார் பதிவாளர் அலுவலகங்களில் இப்படி கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டிருந்தன.
இத்தகைய சூழ்நிலையில் தான் இன்று, தேர்வு செய்யப்பட்ட 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காலை முதல் செய்யப்பட்ட பத்திரப்பதிவுகளை ஆய்வு செய்யும் அவர்கள், அலுவலர்களிடம் இருக்கும் பணத்தை பறிமுதல் செய்து அவற்றுக்கான கணக்குகளை விசாரித்து வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
சென்னை ஆலந்தூர், விருகம்பாக்கம் உள்ளிட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தினர்.
மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள மாவட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அலுவலக வாயில் கதவு மூடப்பட்டு சோதனை நடந்தது. பத்திரப்பதிவு செய்வதற்காக வந்த பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோரிடம் அதிகாரிகள் விசாரித்தனர்.
அதேபோல், விருதுநகர் - மதுரை ரோட்டில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தனர். மேலும் சாத்தூரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திலும், கோவையில் தொண்டாமுத்தூர், காந்திபுரம் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
திருநெல்வேலி விக்கிரமசிங்கபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கூடுதல் எஸ்பி தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது லட்சக்கணக்கில் கணக்கில் வராத பணம் சிக்கியது. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 3 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்து வருகிறது.
தர்மபுரி, தேனி மாவட்டம் போடி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சார்பதிவாளர் அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மணலூர்பேட்டை சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
ஓசூர் அடுத்த சூளகிரி சார்பதிவாளர் அலுவலகம், வேலூர் வேலப்பாடியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம், திருப்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
3 சார் பதிவாளர்கள் சஸ்பெண்ட்
சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திய நிலையில் 3 சார் பதிவாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதால் திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட சார்பதிவாளர்களை சஸ்பெண்ட் செய்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.