

தூத்துக்குடி,
தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (RTO) லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. பீட்டர் பால் தலைமையில் போலீசார் அடங்கிய குழுவினர் இன்று மதியம் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர். சோதனை தொடங்கப்பட்டவுடன் அலுவலகத்தின் வெளிக்கதவுகள் அனைத்தும் உள்பக்கமாக பூட்டப்பட்டன.
அங்கு பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்களின் செல்போன்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இன்று மதியம் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனையானது மிகவும் ரகசியமாக தொடர்ந்தது. சோதனையின்போது பொதுமக்களிடம் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுகளுக்கு லஞ்சம் பெற்றுத் தர முயன்றதாக ஜெயராஜ், பெரியசாமி, ஐசக் ஜெபசீலன், பட்டுராஜா மற்றும் சந்திரன் ஆகிய 5 இடைத்தரகர்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினர். பிடிபட்ட இந்த 5 நபர்களிடம் இருந்தும் கணக்கில் வராத ரூ.55,900 ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சோதனை நிறைவடைந்ததை தொடர்ந்து, பிடிபட்ட இடைத்தரகர்கள் 5 பேரையும் போலீசார் தூத்துக்குடியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் 5 பேரிடமும், இந்த லஞ்சப் பண பரிமாற்றத்தில் ஆர்.டி.ஓ. அலுவலக அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடி அரசு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.