நாகர்கோவில் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

நாகர்கோவில் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரு.1¼ லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Published on

நாகர்கோவில் இடலாக்குடியில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் நில பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இந்த அலுவலகத்தில் லஞ்சம் பெற்றுக்கொண்டு முறைகேடாக விதிகளை மீறி பத்திரப் பதிவு செய்வதாக நாகர்கோவிலில் உள்ள மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு கூடுதல் சூப்பிரண்டு ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஜாண் பெஞ்சமின், ரமா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று மாலையில் திடீரென இடலாக்குடி சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த அலுவலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த பத்திரப்பதிவு பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் பத்திரப்பதிவு உள்ளிட்ட பணிகளுக்கு வந்திருந்த பொதுமக்கள் இடையே திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த நேரத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்துக்குள் இருந்த ஊழியர்கள் மற்றும் பத்திரப்பதிவுக்கு வந்திருந்த பொதுமக்களை போலீசார் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அதே நேரத்தில் வெளியே காத்திருந்த பொதுமக்கள் இனிமேல் பணிகள் எதுவும் நடக்காது என்பதை அறிந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

தொடர்ந்து பணியில் இருந்த சார்பதிவாளர் (பொறுப்பு) ஆன்றோ மெஸ்மால் அறையிலும், அவரது இருசக்கர வாகனத்திலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் இருசக்கர வாகனத்தின் பெட்டியில் இரு தனிநபர்கள் பெயர்கள் எழுதப்பட்ட 2 கவர்கள் இருந்தன. அவற்றில் தலா ரூ.30 ஆயிரம் வீதம் ரூ.60 ஆயிரம் இருந்தது. பின்னர் போலீசார், அலுவலகத்தில் இருந்த ஊழியர்களிடம் சோதனை நடத்தினர். அப்போது கேமரா ஆப்பரேட்டர் ரெஜினா (28) என்பவர் மேஜையில் ரூ.2 ஆயிரத்து 900-ம், இளநிலை உதவியாளர் ரேஷ்மா (28) என்பவர் மேஜையில் இருந்த கோப்புகளுக்கு இடையே ரூ.7,600-ம் கணக்கில் வராத பணம் இருந்தது கண்டறியப்பட்டது.

மேலும் பத்திர பதிவுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு வைத்திருந்ததாக பத்திர எழுத்து அலுவலக ஊழியர்கள் விக்னேஷ் (35), மற்றொரு விக்னேஷ் (38) ஆகியோரிடம் இருந்து ரூ.5 ஆயிரத்து 650-யும், முதியவர் ஒருவரிடம் இருந்து ரூ.45 ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவ்வாறு கணக்கில் காட்டப்படாத பணம் மொத்தம் ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 150-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த பணத்திற்கு மேற்கண்ட 6 பேரும் கணக்கு சொல்லவில்லை என போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 6 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள பொறுப்பு சார்பதிவாளராக பணியில் இருந்த ஆன்றோ மெஸ்மால் நாகர்கோவில் சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இடலாக்குடி சார்பதிவாளர் விடுப்பில் சென்றிருந்ததால் நேற்று பொறுப்பு சார்பதிவாளராக பணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சொந்த ஊர் வில்லுக்குறி அருகே உள்ள காரவிளை ஆகும்.

லஞ்ச ஒழிப்பு சோதனையால் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை இடலாக்குடி பகுதியில் பரபரப்பு நிலவியது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com