"தமிழ் விரோதி பிரசாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது.." - சி.ஏ. தேர்வு தொடர்பாக நிர்மலா சீதாராமன் விமர்சனம்

பொங்கல் அன்று நடைபெற உள்ள தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தி இருந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் இன்று வெளியிட்டிருந்த எக்ஸ் வலைதளபதிவில், "பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள். எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை. அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை. மத்திய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு.

சி ஏ பவுண்டேஷன் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களின் பெற்றோர் பலர் என்னைத் தொடர்பு கொண்டனர். தமிழ்நாட்டின் மக்கள் திருவிழாவான பொங்கல் (14.11.2024) அன்றும், உழவர் திருநாள் (16.11.2024) அன்றும் முறையே Business laws மற்றும் Quantitative Aptitude தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

"அறுவடைத் திருநாளான" பொங்கல் திருவிழா என்பது தமிழ்நாட்டின் தனித்துவமிக்க பண்பாட்டுத் திருவிழா என்பதை கருத்தில் கொண்டு தேர்வர்களுக்கு சிரமங்கள் இன்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்குமாறு மத்திய நிறுவன விவகாரத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் ICAI தலைவர் சி.ஏ. ரஞ்சித் குமார் அகர்வால் அவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்" என்று அதில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பொங்கல் அன்று அறிவிக்கப்பட்ட சி.ஏ. தேர்வு தொடர்பாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விமர்சனம் செய்துள்ளார்.

சி.ஏ. தேர்வுகளை மத்திய அரசு நடத்தவில்லை, ICAI என்ற சுதந்திரமான அமைப்பு நடத்துவதாக குறிப்பிட்டுள்ள பா.ஜ.க. நிர்வாகியின் பதிவை மேற்கோள் காட்டி, தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், "சரியாகவும், விளக்கமாகவும் பதில் சொல்லியிருக்கீங்க சூர்யா அவர்களே... எதில பார்த்தாலும், எப்ப பார்த்தாலும் "தமிழ் விரோதி" பிரசாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது போலும்...." என்று அதில் தெரிவித்துள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com