ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி முறையீடு - அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட்டு மதுரை கிளை மறுப்பு

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, ஆர்ப்பாட்டம் நடத்த இந்து முன்னணி அனுமதி கோரி இருந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மதுரை,

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் நாளை (பிப்.4ம் தேதி) போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து இருந்தனர். இந்நிலையில் மதுரை மாநகரில் வெளிநபர்கள் பிரவேசிக்காத வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோவில் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி விழா நடத்தப்படும் என தர்கா நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து திருப்பரங்குன்றம் மலைக்கு ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி ஆட்களுடன் வந்தார். அப்போது எம்பியுடன் வந்தவர்கள் மலைப்பகுதியில் அசைவ உணவு சாப்பிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இவற்றால் திருப்பரங்குன்றம் மலைப் பிரச்சினை சர்ச்சையானது.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி நாளை இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் 16 கால் மண்டபம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு அனுமதி கோரி இந்து முன்னணியின் மதுரை மாவட்ட பொதுச் செயலாளர் கலாநிதி மாறன் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் மனு அளித்தார். தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து மதத்தினர் திரண்டு வருமாறு இந்து அமைப்புகள் சார்பில் சமூக வலை தளங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்து திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் தடையை மீறி நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி பொதுச் செயலாளர் கலாநிதிமாறன் தெரிவித்திருந்தார்.

இதனிடையே திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் அவசர முறையீடு செய்திருந்தது. இந்நிலையில் அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட்டு மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com