செங்கல்பட்டு மாவட்டத்தில் இ-சேவை மையம் அமைக்க ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இ-சேவை மையம் அமைக்க ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இ-சேவை மையம் அமைக்க ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
Published on

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டமானது படித்த இளைஞர்களையும் தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையிலும், இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்திடவும் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத்துறை, கிராமப்புற தொழில் முனைவோர்கள் போன்ற நிறுவனங்களின் மூலம் இ-சேவை மையங்களை செயல்படுத்தி மக்களுக்கான அரசின் சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்குகிறது. மேலும், அரசின் இணையதள சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்குகிறது.

இதனை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, "அனைவருக்கும் இ-சேவை மையம்" திட்டத்தின் மூலம் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் தொடங்கி பொது மக்களுக்கான அரசின் இணைய வழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்குவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் நோக்கமானது அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்திடவும், மாவட்டங்களில் இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து இ-சேவை மையங்களில் பொது மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்குவதாகும்.

எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் "அனைவருக்கும் இ-சேவை மையம்" திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணைய முறையில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். இந்த திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல் பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் https://www.tnesevai.tn.gov.in/ (or) https://tnega.tn.gov.in/ என்ற இணையதள முகவரிகளை பயன்படுத்தவும். விண்ணப்பங்களை அடுத்த மாதம் 14-ந்தேதி இரவு 12 மணி வரை மட்டுமே பதிவு செய்ய இயலும். கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.3 ஆயிரம் ஆகும் மற்றும் நகரப்புறத்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் ஆகும். இந்த விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். மேலும், விண்ணப்பதாரருக்குரிய பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லானது விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com