சுகாதாரத் துறைக்கான சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

சுகாதாரத் துறைக்கான சான்றிதழ் படிப்புகளுக்கு, விண்ணப்பதாரர்கள் நிரப்பிய படிவங்களை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் வருகிற 12ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் கீழ்க்கண்ட ஓராண்டு கால சான்றிதழ் படிப்புகளில் மொத்தம் 167 இடங்கள் காலியாக உள்ளன. அதில் எமர்ஜென்சி கேர் டெக்னீஷியன்- 14, ரெஸ்பிரட்டரி தெரபி டெக்னீஷியன்- 20, அனஸ்தீஷியா டெக்னீஷியன்- 27, தியேட்டர் டெக்னீஷியன்- 26, ஆர்த்தோபீடிக் டெக்னீஷியன்- 35, மல்டிபர்பஸ் ஹாஸ்பிட்டல் வொர்கர்ஸ்- 45 இடங்கள் உள்ளன.
விண்ணப்பதாரர்கள் 31.12.2025 அன்று 17 வயதைக் கடந்திருக்க வேண்டும். பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் பாடத்திற்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்ற அனைத்து பாடங்களுக்கும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாணவர் சேர்க்கை மதிப்பெண் அடிப்படையிலும், தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படியும் நடைபெறும். மேலும் 5 சதவீத இடஒதுக்கீடு மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்படும். விண்ணப்பப் படிவங்கள் இணையதளங்களில் 4.9.2025 முதல் இலவசமாக கிடைக்கும்.
விண்ணப்பதாரர்கள் நிரப்பிய படிவங்களை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்/ துணை முதல்வர் அலுவலகத்தில் வருகிற 12ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தேர்ச்சி பட்டியல் செப்டம்பர் 16ம் தேதி வெளியிடப்படும். மாணவர் சேர்க்கை செப்டம்பர் 20ம் தேதி முதல் தொடங்கும். மீதமுள்ள இருக்கைகளுக்கான வாக்-இன் நேரடி சேர்க்கை செப்டம்பர் 22ம் தேதி முதல் நடைபெறும். முழு சேர்க்கை செயல்முறை செப்டம்பர் 30ம் தேதிக்குள் நிறைவு பெறும். வகுப்புகள் அக்டோபர் 6ம் தேதி முதல் ஆரம்பமாகும்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் கவுன்சிலிங் நடைபெறும். மாணவர்கள் மூலச் சான்றிதழ்களான மதிப்பெண் சான்றிதழ், இருப்பிடச் சான்று, சாதிச் சான்றிதழ், வயது நிரூபணச் சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவக் குழு சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
சேர்க்கை பெற்ற மாணவர்கள் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் பயன்கள், நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி தகுதியானவர்களுக்கு வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு 0461-2392698 என்ற உதவி எண் அல்லது deantut@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






