தி.மு.க. ஆட்சியில் வழங்கிய ரூ.2 ஆயிரம் கோடி கட்டுமான திட்டத்திற்கு அனுமதி ரத்து - தமிழக அரசு நடவடிக்கை

சென்னை பெரும்பாக்கத்தில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான கட்டுமான திட்டத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு
Published on

சென்னை,

ராம்சார் ஈரநிலமாக அறிவிக்கப்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு அருகில் உயரமான குடியிருப்புகள் கட்டுவதற்காக, தி.மு.க. அரசால் கடந்த 2025 ஜனவரியில் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ரத்து செய்துள்ளது.

முன்னதாக சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பல அடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட அனுமதி அளித்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உத்தரவை ரத்து செய்யக் கோரியும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டருக்கு எந்த விதமான கட்டுமான பணிகளுக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன், அதிமுக வழக்கறிஞர் மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

பின்னர் அந்த வழக்குகள் இந்த ஆண்டு பிப்ரவரியில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் காரணமாக, அடுக்குமாடி குடியிருப்பு வளாக கட்டுமானப் பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது.

இந்நிலையில் பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் பகுதியில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான 1,250 வீடுகள் கட்ட பிரிகேட் மார்கன் திட்டத்திற்கு வழங்கப்பட்டு இருந்த சுற்றுசூழல் அனுமதியை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) ரத்து செய்துள்ளது.

திட்ட முன்மொழிபவர் ஈரநில ஆணையத்திடம் அனுமதி பெற தவறியதால் சுற்றுச்சூழல் ஆணையம் இந்த திட்டத்திற்கு தடைவிதித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com