

சென்னை,
தஞ்சாவூரில் அமையவுள்ள உள்நாட்டு விமான நிலையத் திட்டப் பணிகள் தொடர்பான முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. திருச்சி சர்வதேச விமான நிலைய இயக்குநர் எஸ்.எஸ். ராஜு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ரூ.100 கோடி மதிப்பீட்டில் தஞ்சாவூரில் விமான நிலையம் அமையவுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை நிர்வாக அனுமதிக்காகவும், நிதி ஒப்புதலுக்காகவும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு ஏற்கனவே 55 ஏக்கர் நிலத்தை ஒப்படைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் இறுதியாக! தஞ்சாவூர் விமான நிலையம் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இது தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது:-
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய முதல்-அமைச்சரும் தலைவருமான மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் அரசால் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்ட 55 ஏக்கர் நிலத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
நவம்பர் 2023-ல் பாதுகாப்புத் துறை செயலாளர் மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை செயலாளர் ஆகியோரை நாங்கள் சந்தித்த பிறகு, இத்திட்ட பணிகள் தீவிரமடைந்தன. அதே மாதத்தில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து விமான நிலையம் அமையவுள்ள இடத்தை பார்வையிட்டதுடன், நான்கு வழி சாலைக்கான இந்திய விமான நிலைய ஆணையத்தின் கோரிக்கையையும் நிறைவேற்ற உதவினேன்.
அதனை தொடர்ந்து, 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரி மற்றும் அவரது குழுவினருடனும் நாங்கள் ஆலோசனை கூட்டங்களை நடத்தினோம். தஞ்சாவூர் பகுதியிலிருந்து பயணிக்கும் பயணிகள் குறித்த தரவுகளை சேகரிப்பதில் மேற்கொண்ட முயற்சிகளுக்காக திருச்சி விமான நிலைய இயக்குநருக்கு சிறப்பு நன்றிகள்
திமுக அரசு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அளித்து வரும் முன்னுரிமை தொடர்ந்து நல்ல பலன்களை தருவதை காண்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.