

சென்னை,
தமிழகத்தில் தொடங்கப்படும் முதலீட்டு திட்டங்களுக்கு 21 நாளில் அனுமதி வழங்கும் வகையில் கொண்டு வரப்பட்ட தமிழக அரசின் சட்டத்திற்கு கவர்னர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழ்நாடு வணிக எளிதாக்கல் (திருத்த) சட்டம், 2026 தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்துக்கு கவர்னர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடர்ந்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியைப் பெருக்க தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படுகிறது. இந்த ஆணையத்தின் தலைவராக அரசின் தலைமைச் செயலாளர் இருப்பார். தொழில்கள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அரசு செயலாளர், உறுப்பினர்-ஒருங்கிணைப்பாளராக இருப்பார். மேலும், அரசு நிர்ணயிக்கும் முறையில் 20 பேருக்கு மிகாமல் உறுப்பினர்களை நியமிக்கலாம்.
இந்த ஆணையம் பெரிய, முக்கியத்துவம் வாய்ந்த முதலீட்டுத் திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும். குறிப்பாக, ரூ.200 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட மூலதன முதலீடு செய்யப்பட உள்ள திட்டங்கள், 5 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என எதிர் பார்க்கப்படும் திட்டங்கள், எப்.டி.ஏ. வர்த்தக ஒப்பந்தங்களுடன் தொடர்புடைய முதலீடுகள், இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் தமிழர் வம்சாவளியினரின் முதலீடுகள் ஆகியவை இதில் அடங்கும்.
இத்தகைய முதலீடுகள் திட்டம் தொடங்குவதற்கு முன் உள்ள நிலையில் இருந்து, திட்டம் நடைமுறைக்கு வந்து உற்பத்தி அல்லது செயல்பாடு தொடங்கும் நிலை வரையிலும் அவற்றின் முன்னேற்றத்தை ஆணையம் ஆய்வு செய்யும். மேலும், பெரிய முதலீட்டுத் திட்டங்களுக்கு தேவையான அனுமதிகள், சலுகைகள் மற்றும் பிற தேவையான ஒப்புதல்களை உரிய காலத்தில் வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஆணையம் உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம். தொழில் திட்டங் களுக்காக ஒதுக்கப்பட்டு, இன்னும் வணிக ரீதியிலான செயல்பாடுகள் தொடங்காத தொழில் நிலங்களின் ஒதுக்கீடு மற்றும் பயன்பாட்டையும் ஆணையம் ஆய்வு செய்யும்.
மேலும், தமிழ்நாட்டில் முதலீட்டுச் சூழலையும் தொழில் தொடங்குவதற்கான எளிதான நடைமுறையையும் மேம்படுத்து வதற்கான கொள்கை, ஒழுங்குமுறை மற்றும் நடைமுறை நட வடிக்கைகளை ஆணையம் பரிந்துரைக்கும். இந்தச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்படும் ஒற்றைச் சாளர முறையுடன் தொடர்புடைய இந்திய அரசின் நடவடிக்கைகளைச் செயல்படுத்தவும். ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.
தொழில் திட்டங்களுக்கு வழங்கப்படும் அனுமதிகள் தொடர்பாகவும் முக்கியமான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சட்டம் அல்லது அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளில் ஏதேனும் அனுமதிக்கு 21 நாட்களுக்கு மேல் காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலோ அல்லது காலவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படாமல் இருந்தாலோ, அந்தக் காலவரம்பு 21 நாட்களாகக் குறைக்கப்பட்டதாகக் கருதப்படும்.
அரசு அறிவிக்கும் பொது விடுமுறைகள் மற்றும் உள்ளூர் விடுமுறைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. ஏற்கனவே 21 நாட்கள் அல்லது அதற்கும் குறைவான காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தால், அந்தக் காலவரம்பே தொடர்ந்து அமலில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.