காட்டின் காவலனுக்கே பாதுகாப்பில்லையா? அதிர்ச்சி தரும் உயிரிழப்பு புள்ளிவிவரங்கள்

இந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் இதுவரை 40-க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளன.
காட்டின் காவலனுக்கே பாதுகாப்பில்லையா? அதிர்ச்சி தரும் உயிரிழப்பு புள்ளிவிவரங்கள்
Published on

தேனி,

காடுகளின் காவலனாகவும், இயற்கையின் சமநிலையை பேணும் முதன்மை உயிரினமாகவும் திகழ்பவை யானைகள். காடுகளின் வளத்தை பெருக்குவதில் யானைகள் முக்கிய பங்காற்றுகின்றன.

காட்டின் பேருயிர்

காடுகளில் இரை தேடி பயணிக்கும் யானைகள் செடிகள், மரக்கிளைகளை ஒடித்து தின்பதோடு, செல்லும் இடங்கள் எங்கும் விதைகளை விதைக்கின்றன. யானைகளின் சாணத்தில் எண்ணற்ற விதைகள் இருக்கும். சாணத்தை உரமாக்கி அந்த விதைகள் வளர்ந்து காட்டை வளமாக்குகின்றன. யானைகளின் வியக்கத்தக்க வாழ்வியலும், அவற்றின் ஆழமான குடும்ப பிணைப்பும் இயற்கையின் வரப்பிரசாதம் எனலாம். காட்டின் பேருயிரான யானைகள் சுதந்திரமாக உலா வரும்போது காடுகளின் வளம் பெருகுகிறது. ஆனால், தமிழகத்தில் காட்டு யானைகளின் உயிரிழப்பு என்பது, அவற்றால் பாதுகாப்பாக காடுகளில் உலாவ முடிகிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.

1,883 யானைகள் உயிரிழப்பு

தமிழக காடுகளில் யானைகளின் உயிரிழப்பு அடிக்கடி நிகழ்கின்றன. வயது முதிர்வு. நோய் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு ஒருபுறம் என்றால், இயற்கைக்கு மாறான உயிரிழப்பு சம்பவங்களும் நடக்கின்றன. இந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் இதுவரை 40-க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளன. கடந்த 15 ஆண்டுகளில் 1,883 யானைகள் செத்து மடிந்துள்ளன. அதில் இயற்கையான மரணம் 1,663 ஆகும். யானை-மனித மோதலில் மின்சாரம் பாய்தல், வேட்டையாடுதல், விபத்தில் சிக்குவது போன்ற இயற்கைக்கு மாறாக உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை மட்டும் 199-ஐ தொட்டுள்ளது.

யானைகளுக்கு பாதுகாப்பு இல்லையா?

தேனி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 15 ஆண்டுகளில் 30 யானைகள் உயிரிழந்துள்ளன. அதில் 18 யானைகள் இயற்கையாகவும், 12 யானைகள் இயற்கைக்கு மாறாகவும் இறந்துள்ளன. மாவட்டத்தில் மேகமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தான் இந்த 30 யானைகளும் இறந்துள்ளன. அதில் வருசநாடு வனச்சரகத்தில் 4, கூடலூர் வனச்சரகத்தில் 7, மேகமலை வனச்சரகத்தில் 4, சின்னமனூர் வனச்சரகத்தில் 6, கம்பம் கிழக்கு வனச்சரகத்தில் 9 யானைகள் உயிரிழந்துள்ளன. இதில் மின்விபத்தில் சிக்கி மட்டும் 7 யானைகள் செத்துள்ளன. 2 யானைகள் தந்தத்திற்காக வேட்டையாடப்பட்டுள்ளன. இயற்கைக்கு மாறான உயிரிழப்புகளில் தமிழக சராசரியை விட தேனி மாவட்டத்தின் சராசரி மிக அதிகமாக உள்ளது. மாநில அளவில் மொத்த இறப்புகளில் இயற்கைக்கு மாறான உயிரிழப்பு 10.57 சதவீதமாக உள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் இது 40 சதவீதமாக உள்ளது. எனவே. காடுகளின் காவலனாக திகழும் யானைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? என்பது இயற்கை ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.

தேவையான நடவடிக்கை

யானைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை வனத்துறையினர் தீவிரப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. மாவட்ட வனப்பகுதிகளில் அந்நிய களைச்செடிகளின் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது. அந்த களைச்செடிகளை அகற்றிவிட்டு யானைகளுக்கு தேவையான பழ மரங்கள், இலைதழைகளை கொடுக்கும் மரங்கள், செடி வகைகளை வளர்க்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதுபோல், கடந்த காலங்களில் யானைகள் காட்டில் இறந்தால் அதை வனத்துறையினர் கண்டறியாமல் அழுகிய பின்பு கண்டுபிடித்த சம்பவங்களும் நடந்துள்ளன.

வனத்துறையில் பணியாளர்கள் குறை

இதுபோன்ற சம்பவங்களின் போது யானையின் இறப்புக்கான உண்மையான காரணத்தை அறிய முடியாமல் போகிறது. வனப்பரப்பளவுக்கு ஏற்ப ரோந்து செல்வதற்கு போதிய எண்ணிக்கையில் வனத்துறையில் பணியாளர்கள் இல்லை என்ற குறையும் உள்ளது. எனவே கூடுதல் பணியாளர்களை நியமிப்பதோடு, கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளையும் தீவிரப்படுத்த வேண்டும். ஏனெனில், யானைகளை பாதுகாப்பது என்பது காடுகளை பாதுகாப்பதற்கு சமம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com