

சென்னை,
செய்தியாளர்களை சந்தித்த சென்னை மேயர் பிரியா, தி.மு.க. தொண்டர்கள் மீது லத்திச்சார்ஜ் நடத்தும் அளவுக்கு நாங்கள் என்ன தீவிரவாதிகளா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தஞ்சையில் நடைபெற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை மேல் விசாரணைக்காக தஞ்சைக்கு அழைத்துச் சென்றனர்.
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் இல்லம் முன்பும் ஏராளமான திமுக தொண்டர்கள் திரண்ட நிலையில், அவர்களை போலீசார் அப்புறப்படுத்தி கைது செய்தனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சென்னை மேயர் பிரியா, உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், "தி.மு.க. தொண்டர்கள் மீது லத்திச்சார்ஜ் நடத்தும் அளவுக்கு நாங்கள் என்ன தீவிரவாதிகளா? தியேட்டருக்கு சென்று 'ஜனநாயகன்' படம் பார்த்து அழுகிறார்கள். ஆனால் இன்று போலீசாரை வைத்து ரத்தம் வரும் அளவுக்கு அடிக்கிறார்கள். இதுதான் ஜனநாயகமா? போலீஸ் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய முடியாது. இந்த அராஜக அரசியலை கண்டு நாங்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டோம்" என்று கூறினார்.
உதயநிதி ஸ்டாலின் கைது மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களால் தமிழகம் முழுவதும் அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.