பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைதான வாலிபருக்கு 3 நாள் போலீஸ் காவல் பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவு

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததாக கைது செய்யப்பட்ட வாலிபரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைதான வாலிபருக்கு 3 நாள் போலீஸ் காவல் பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவு
Published on

பூந்தமல்லி,

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு சிலர் உளவு பார்த்து தகவல் தெரிவிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதில், கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு உத்தமன் தெருவை சேர்ந்த அன்சார்மீரான் (வயது 28) என்பவர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக தெரியவந்தது. சென்னையில் பதுங்கி இருந்த அன்சார்மீரானை தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

3 நாட்கள் காவல்

அன்சார்மீரானுடன் தொடர்பில் இருக்கும் நபர்கள் யார்? என்பது குறித்து அறிய அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்த தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் முடிவு செய்தனர். இதற்கு அனுமதி கோரி பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் நேற்றுமுன்தினம் அவர்கள் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நேற்று நீதிபதி செந்தூர்பாண்டியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, அன்சார் மீரானை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கினார்.

ரகசிய இடத்தில் விசாரணை

மேலும், அன்சார் மீரானிடம் விசாரணையை முடித்துவிட்டு, 16-ந் தேதி மாலை மீண்டும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து அன்சார் மீரானை கோர்ட்டில் இருந்து அழைத்துச் சென்ற போலீசார், ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர்.

விசாரணையில் அன்சார் மீரானுக்கு யார் யாருடன் தொடர்பு உள்ளது, அவருக்கு கீழ் செயல்படும் நபர்கள் யார்? அவர்களின் பணிகள் என்ன? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் தெரியவரும் என போலீசார் கூறினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com