நாம் தமிழர் உறவுகளைக் கைதுசெய்திருப்பது தவெக அரசின் கீழ்த்தரமான அரசியல்! - சீமான் கண்டனம்

கோவையில் உள்ள கார்த்திகாவின் இல்லத்திற்குச் சென்ற தாராபுரம் போலீசார் அவரையும், அவரது கணவரையும் கைது செய்தனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்
Published on: 

கோவை,

நாம் தமிழர் உறவுகளைக் கைதுசெய்திருப்பது தவெக அரசின் கீழ்த்தரமான அரசியல் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கார்த்திகா கைது

தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டவர் கார்த்திகா. இவர் அக்கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். இடைத்தேர்தலின்போது, தாராபுரம், வீராச்சிமங்கலம் பிரிவு பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் பிரசாரம் மேற்கொள்ள சென்றனர். அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.முதல்-அமைச்சர் விஜய் ரோடு ஷோ மேற்கொள்ள உள்ளதாகவும். இதனால் அந்த பகுதியில் அனுமதி வழங்கப்படாது எனவும் போலீசார் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா மற்றும் கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

எங்கள் பிரசாரத்தை தடுக்கும் விதத்திலேயே போலீசார் செயல்பட்டு வருவதாகவும் ஒருதலைபட்சமாக போலீசார் செயல்படுவதாகவும் கூறி, அப்பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் முதல்-அமைச்சர் பயணிக்கும் சாலையில் மறியலில் ஈடுபட்டது, காவல் நிலையத்தை முற்றுகையிட்டது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் கார்த்திகா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.இந்த நிலையில், கோவையில் உள்ள கார்த்திகாவின் இல்லத்திற்குச் சென்ற தாராபுரம் போலீசார் அவரையும், அவரது கணவரையும் கைது செய்தனர். இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சீமான் கண்டனம்

இது தொடர்பாக சீமான் வெளியிட்ட பதிவில்,

அரசியல் பழிவாங்கும் நோக்கோடு பொய் வழக்குப் புனைந்து தங்கை கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகளைக் கைதுசெய்திருப்பது தவெக அரசின் கீழ்த்தரமான அரசியல்! அதிகாரம் நிலையானதல்ல எந்த ஆட்சியும் நிரந்தரமானதல்ல! இந்த ஆட்சியும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com