‘போதைப்பழக்கம் இருக்கும் வரை பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு என்பது கனவுதான்’ - சவுமியா அன்புமணி

சிங்கப்பெண் படைக்கு நிறைய பேரை தேர்வு செய்து பெண்கள் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
‘போதைப்பழக்கம் இருக்கும் வரை பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு என்பது கனவுதான்’ - சவுமியா அன்புமணி
Published on

தர்மபுரி,

பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி தர்மபுரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“தமிழகத்தின் கடன் சுமார் ரூ.13 லட்சம் கோடி என தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதிலும் கடந்த 5 ஆண்டுகளில்தான் அதிகமாக கடன் வாங்கப்பட்டுள்ளது. இதனை பா.ம.க. ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறது.

நான் கூட பல முறை தர்மபுரியில் என்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் கூறியிருக்கிறேன். இத்தனை லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கிறார்கள், அதில் ஒரு ஆயிரம் கோடியை கொடுத்திருந்தால் தர்மபுரி மாவட்டம் பிழைத்திருக்குமே, காவிரி உபர்நீர் திட்டத்தை செயல்படுத்தி இருக்கலாமே என்ற கோரிக்கைகளை கூட நாங்க சொல்லி இருக்கிறோம்.

தமிழ்நாடு அரசு தற்போது பெண்கள் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் அதிரடிப்படையை அமைத்துள்ளது. அதன் மூலம் பெண்கள் பாதுகாப்பை இன்னும் அதிகமாக உறுதி செய்ய வேண்டும். சிங்கப்பெண் படைக்கு நிறைய பேரை தேர்வு செய்து பெண்கள் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

குறிப்பாக இரும்பு கரம் கொண்டு போதை கலாசாரத்தையும், போதைப்பழக்கத்தையும் அடித்து நொறுக்க வேண்டும். அப்படி செய்தால்தான் பெண்கள் காப்பாற்றப்படுவார்கள். எவ்வளவுதான் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டாலும், இந்த போதைப்பழக்கம் இருக்கிற வரையில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு என்பது கனவுதான். இந்த போதைப்பழக்கத்தை தமிழ்நாட்டை விட்டு ஒழிக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com