

சென்னை,
தமிழகத்தில் நடைபெற உள்ள 17-வது சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியான தி.மு.க., எப்படியும் தொடர் வெற்றியை பதிவு செய்து 7-வது முறையாக ஆட்சி அரியணையை பிடித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறது. கடந்த (2021) தேர்தலில் 13 கட்சிகளுடன் கூட்டணி அமைத்த தி.மு.க., இந்த முறை 26 கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்துள்ளது.
இதுவரை காங்கிரஸ் (28), ம.தி.மு.க. (4), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2), மனிதநேய மக்கள் கட்சி (2), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (2) ஆகிய 5 கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை தி.மு.க. முடித்துவிட்டது. இரு கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் இழுபறி நிலை தொடர்வதால், ஏனைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை தொடர முடியாத நிலையில் தி.மு.க. உள்ளது.
இவ்வாறு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை ஒரு பக்கம் தி.மு.க. நடத்திக் கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம் தங்கள் கட்சியில் வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணியையும் ஜரூராக நடத்தி வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 174 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க., அதில் 125 இடங்களை கைப்பற்றியது.
அந்த வகையில், இந்த முறையும் வேட்பாளர்கள் தேர்வை தி.மு.க. கண்ணும் கருத்துமாக நடத்தி வருகிறது. முதற்கட்டமாக, தற்போது தி.மு.க. எம்.எல்.ஏக்களாக இருப்பவர்களுக்கு, தொகுதியில் எந்த அளவுக்கு செல்வாக்கு உள்ளது?. மக்கள் பிரச்சினைகளை எந்த அளவுக்கு தீர்த்து வைத்துள்ளனர்?. சட்டசபையில் செயல்பாடு எப்படி?, மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் வெற்றி பெறுவார்களா? என்ற அடிப்படையில் ஒரு நீண்ட சர்வேயே எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, தி.மு.க.வுக்கு தேர்தல் பணிகளை மேற்கொண்டு வரும் பென் நிறுவனம், உளவுத்துறை ரிப்போர்ட் மற்றும் ஒரு தனியார் நிறுவனத்தின் சர்வே ஆகியவற்றை கொண்டு, தனித்தனியாக தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், பிறகு அந்த 3 பட்டியலையும் பென் நிறுவன தலைமையிடம் கொடுத்து, ஒரே பட்டியலாக தயாரித்து தரவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அந்த வகையில், தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாம். தற்போது, அமைச்சர்களாக இருப்பவர்கள், கட்சியில் மாவட்ட செயலாளர்களாக உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. செயல்பாடு சரியில்லாத 30 எம்.எல்.ஏ.க்களுக்கு 'கல்தா' கொடுக்கப்பட இருப்பதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முறை புதியவர்கள் நிறைய பேருக்கு வாய்ப்பு வழங்க தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளதாம். இதுதொடர்பாக, மாவட்ட செயலாளர்களிடமும் கருத்து கேட்கப்பட்டதாம். தி.மு.க.வில் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்படுபவர்கள், தேர்தல் செலவையும் பார்த்துக்கொள்ள வேண்டுமாம். தொகுதிக்கு ரூ.20 கோடி வரை செலவு செய்ய வேண்டியது இருக்குமாம்.
இப்படி தி.மு.க.வில் வேட்பாளர் தேர்வு குறித்து புதிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதேபோல், இதுவரை தேசிய அரசியலில் இருந்து வரும் கனிமொழி எம்.பி.யும் இந்த முறை சட்டசபை தேர்தலில் பங்கேற்று மாநில அரசியலுக்கு வர இருக்கிறாராம். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ள அவர், தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில், முக்கிய துறைக்கு அமைச்சராகவும் திட்டமிட்டுள்ளாராம்.