

சென்னை,
தவெக தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்னர், முதல் சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. இந்த நிலையில் இன்று தமிழக சட்டசபையில் கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு எதிராக அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தனித் தீர்மானத்தை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்தார். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்த நிலையில், இந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. அப்போது தமிழக சட்டப்பேரவை நேரலை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இதற்கு அதிமுகவின் ஐடி விங் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. முழு நேரலை... முழு நேரலை... அத்தனையும் உருட்டா சார்! ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம். எந்த வாக்குறுதியும் நிறைவேத்துற மாதிரி ஐடியாவே இல்ல போல, அப்படித்தானே சார்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.