

சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தகுதித் தேர்வில் இரண்டாம் தாளுக்கான மதிப்பெண் வழங்குவதில் நடைபெற்ற குளறுபடியை நேற்று முன்தினம் நாம் சுட்டிக்காட்டிய நிலையில், தற்போது சிலரது மதிப்பெண்களில் மட்டும் நீலம் மற்றும் மஞ்சள் வண்ணமிட்டிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு பல ஆண்டுகள் கழித்து நடத்தப்பட்ட தகுதித் தேர்வில், மதிப்பெண் வழங்குவதில் குளறுபடி, வண்ண அடையாளக் குறியீடு குளறுபடி எனத் தொடர்ந்து எழுந்துவரும் புகார்கள், தேர்வில் மிகப்பெரும் முறைகேடு நடைபெற்றிருக்கக் கூடுமோ எனும் சந்தேகத்தைக் கிளப்புகிறது. அதிலும் தங்கள் தலைமையிலான ஆட்சிப் பொறுப்பேற்ற பின் வெளிவந்துள்ள முதல் தகுதித் தேர்வின் முடிவிலேயே அடுக்கடுக்கான புகார்கள் எழுப்பியுள்ளது, தங்களது "தூய சக்தி" அரசின் நிர்வாகத் திறனை சந்தேகம் கொள்ளச் செய்கிறது.
பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் மற்றும் லட்சக்கணக்கான அரசுக் கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டாவது, உடனடியாக விசாரணை நடத்தி, வெளியிடப்பட்ட முடிவுகளை மறுபரிசீலனை செய்யுங்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.