குழந்தை பிறக்க பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் ரூ.56 லட்சம் மோசடி: ஜோதிடர் கைது

சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணமாகி 6 ஆண்டுகளாக குழந்தைகள் இல்லை என்பதற்காக, கும்பகோணத்தை சேர்ந்த ஒரு ஜோதிடரை தொடர்பு கொண்டு பரிகாரம் செய்ய ரூ.56 லட்சம் பணம் கொடுத்துள்ளார்.
ஜோதிடர் ராமநிரஞ்சன்.
Published on: 

சென்னை,

குழந்தை பிறக்க பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் ரூ.56 லட்சம் மோசடி செய்த கும்பகோணம் ஜோதிடரை போலீசார் கைது செய்தனர்.

குழந்தை பிறக்க பரிகாரம்

சென்னையை அடுத்த நங்கநல்லூர் லட்சுமிநகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 42). இவரது மனைவி காயத்ரி(38). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளாகியும் குழந்தைகள் இல்லை. இதனால் கடந்த 2023-ம் ஆண்டு குடும்பத்துடன் கும்பகோணம் சென்றனர். அப்போது, குழந்தை பாக்கியம் மற்றும் குடும்ப பிரச்சினைகளுக்கு பரிகாரம் செய்து தீர்வு காணப்படும் என விளம்பர பலகை வைக்கப்பட்டிருந்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு காயத்ரி பேசினார்.

மறுமுனையில் பேசிய கும்பகோணத்தைச் சேர்ந்த ஜோதிடர் ராமநிரஞ்சன்(42) என்பவர், உங்கள் குடும்பத்தில் பிரச்சினைகள் உள்ளன. அவற்றுக்கு பரிகாரம் செய்து தீர்வு காண்பதாக கூறினார். இதனை நம்பிய காயத்ரியிடம் இருந்து, கடந்த 2023-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை கூகுள் பே மூலம் சிறுகச்சிறுக என மொத்தம் ரூ.56 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

போலீசில் புகார்

ஆனால், அவர் கூறியபடி குடும்ப பிரச்சினைகள் எதுவும் தீரவில்லை. இதற்கிடையே, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சீனிவாசனுக்கும் வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த காயத்ரி, பங்குச்சந்தையில் முதலீடு செய்திருந்த பணம் மற்றும் நகைகளை விற்று தான் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி ஜோதிடரிடம் கேட்டார். ஆனால் பணத்தை திருப்பி கொடுக்காமல் ராமநிரஞ்சன் மோசடி செய்துவிட்டார்.

இதுகுறித்து காயத்ரி பழவந்தாங்கல் போலீசில் புகார் அளித்தார். பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன் உத்தரவின்பேரில், உதவி கமிஷனர் பசுபதி மற்றும் பழவந்தாங்கல் இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஜோதிடர் கைது

விசாரணையில், கும்பகோணத்தில் ஜோதிடராகவும், கார் விற்பனை தொழிலும் செய்து வரும் ராமநிரஞ்சனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான ராமநிரஞ்சன், அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் மாநில பொதுச்செயலாளராக இருப்பதாக கூறப்படுகிறது.

X