

பூந்தமல்லி,
சென்னை விருகம்பாக்கம், தசரதபுரம், அருணாச்சலம் சாலையில் பா.ஜனதா கட்சியின் சார்பில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு பாராட்டு விழா, சென்னை கோட்டத்தின் மாவட்ட, மண்டல தலைவர்கள் அறிமுக விழா, குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ், முன்னாள் மத்திய மந்திரி பொன்ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பிறகு முக்கிய நிர்வாகிகள் அங்கிருந்து சென்றனர்.
சிறிது நேரத்தில் பொதுக்கூட்டம் நடந்த மேடையின் அருகே உள்ள வீட்டின் மாடியில் இருந்து பிரதமர் மோடியையும், பா.ஜனதாவுக்கு எதிராகவும் மர்ம நபர்கள் சிலர் சத்தமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பா.ஜனதாவினர் அந்த வீட்டின் மாடியின் மீது கற்களை வீசினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பா.ஜனதாவினரை சமரசப்படுத்தினார்கள்.
இதையடுத்து போலீசார் அந்த வீட்டின் மாடிக்கு சென்றபோது வாலிபர்கள் சிலர் தங்கி இருப்பதும், அவர்கள் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது.
இதற்கிடையே பிரதமர் குறித்து அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் அந்த வீட்டின் மாடியில் செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் போலீசாரின் சமரச பேச்சை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மோடியை அவதூறாக பேசினார்களா? என்பது பற்றி அந்த வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.