

சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று நடைபெற்ற ஏலத்திற்காக சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 6 டன் பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
நேற்றைய ஏலத்தில் பூக்களின் விலை நிலவரம் (கிலோ கணக்கில்) வருமாறு:-
• மல்லிகைப்பூ - ரூ.1,960
• கனகாம்பரம் - ரூ.1,100
• முல்லைப்பூ - ரூ.600
• காக்கடா - ரூ.600
• சாதிமல்லி - ரூ.600
• செவ்வந்தி - ரூ.140
• பட்டுப்பூ - ரூ.135
• அரளி - ரூ.120
• சம்பங்கி - ரூ.100
• செண்டுமல்லி - ரூ.96
• துளசி - ரூ.60
முன்னதாக நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,440-க்கும், கனகாம்பரம் ரூ.1,200-க்கும், சாதிமல்லி ரூ.600-க்கும், முல்லைப்பூ ரூ.560-க்கும், காக்கடா ரூ.500-க்கும், அரளி ரூ.170-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும், பட்டுப்பூ ரூ.135-க்கும், சம்பங்கி ரூ.80-க்கும், செண்டுமல்லி ரூ.70-க்கும், துளசி ரூ.60-க்கும் விற்பனையானது.
இதன் மூலம் நேற்று முன்தினத்தை விட நேற்றைய ஏலத்தில் ஒரே நாளில் மல்லிகைப்பூ கிலோவுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது. இதேபோல் காக்கடா ரூ.100-ம், முல்லைப்பூ ரூ.40-ம், செண்டுமல்லி ரூ.26-ம், சம்பங்கி ரூ.20-ம் விலை அதிகரித்து விற்பனையானது. அதேசமயம், கனகாம்பரம் கிலோவுக்கு ரூ.100-ம், அரளி ரூ.50-ம், செவ்வந்தி ரூ.20-ம் விலை குறைந்து விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
மல்லிகைப்பூ விலை உயர்வால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து வியாபாரிகள் தெரிவித்தபோது, சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு பனிப்பொழிவு காரணமாக மல்லிகை, கனகாம்பரம் மற்றும் காக்கடா உள்ளிட்ட பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் தேவை அதிகரித்துள்ளதால், வியாபாரிகள் போட்டிப்போட்டு அதிக விலைக்கு பூக்களை ஏலம் எடுத்து செல்கின்றனர்.