ஏ.டி.எம். எந்திரத்தில் பசையை தடவி நூதன முறையில் கொள்ளை: வடமாநில வாலிபர்கள் கைது

பணத்தை திருடிய அரியானா மாநிலத்தை 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஏ.டி.எம். எந்திரத்தில் பசையை தடவி நூதன முறையில் கொள்ளை: வடமாநில வாலிபர்கள் கைது
Published on

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். ஒன்று உள்ளது. இந்த ஏ.டி.எம். பழுதானதால் அதை சரி செய்வதற்காக பராமரிப்பாளர்கள் வந்தனர். அவர்கள் அந்த ஏ.டி.எம்.மில் இருந்த கேமராக்களை ஆய்வு செய்தபோது 2 வாலிபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் பசையை தடவி நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் ஓசூரை சுற்றி உள்ள அனைத்து ஏ.டி.எம். மையங்களையும் பராமரிப்பவர்களுக்கு வாட்ஸ்-அப்பில் இந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் ஓசூரில் ஏரித்தெருவில் உள்ள ஏ.டி.எம். மையத்தை முரளி என்பவர் கண்காணித்து கொண்டிருந்தார். அந்த நேரம் 2 வாலிபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்களின் முகமும், ஏற்கனவே ஏ.டி.எம். மையங்களில் பணத்தை கொள்ளையடித்த நபர்களின் முகமும் ஒன்றாக இருப்பதை கண்ட முரளி அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் அவர்கள் ஏ.டி.எம். கொள்ளையர்கள் என்பதை உறுதி செய்த முரளி, உடனடியாக ஏ.டி.எம். மைய ஷட்டரை வெளியே பூட்டி விட்டு ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அந்த ஏ.டி.எம். மையத்திற்கு வந்து உள்ளே இருந்த 2 கொள்ளையர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், வடமாநிலங்களில் இருந்து சரக்கு ஏற்றி வரும் வாகனங்களில் வரக்கூடிய அவர்கள் ஏ.டி.எம். மையங்களை நோட்டமிட்டு பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை திருடிய அரியானா மாநிலத்தை சேர்ந்த தாகிர் (வயது 31), முகமது சாத் (20) அவர்களுக்கு உதவிய ஹசம் (28) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com