தூத்துக்குடியில் பிளஸ்-1 மாணவர் மீது தாக்குதல்: சக மாணவர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு

சாத்தான்குளம் பகுதியில் ஒரு பள்ளியில் சக மாணவர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவரின் பெற்றோர் வி.சி.க. தலைவர் திருமாவளவனிடம் வீடியோ கால் மூலம் தகவல் தெரிவித்தனர்.
தூத்துக்குடியில் பிளஸ்-1 மாணவர் மீது தாக்குதல்: சக மாணவர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு
Published on

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள முதலூரில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். சம்பவத்தன்று, இந்த பள்ளியில் பிளஸ்-1 பயின்று வரும் வாலத்தூரைச் சேர்ந்த 16 வயது மாணவருக்கும், அதே பள்ளியில் பயிலும் சில மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது திடீர் மோதலாக மாறியுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த 5 மாணவர்கள் ஒன்றிணைந்து, பாதிக்கப்பட்ட மாணவரைச் சாதிய ரீதியாக இழிவுபடுத்திப் பேசியதுடன், அவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மாணவர் சிகிச்சைக்காகச் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஆரம்பத்தில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தட்டார்மடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் வீடியோ கால் மூலம் தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, திருமாவளவன் தரப்பிலிருந்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலம்மாள் விசாரணை மேற்கொண்டு, தாக்குதலில் ஈடுபட்ட 5 மாணவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் (PCR) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

தற்போது இதுகுறித்து சாத்தான்குளம் ஏ.எஸ்.பி. ஆவுடையப்பன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com