புதிய அணை கட்ட முயற்சி: கேரள அரசை கண்டித்து 5 மாவட்ட விவசாயிகள் நாளை போராட்டம்

கேரள அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தேனி,

தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்மட்ட உயரம் 152 அடி. அதில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது. அணைப் பகுதியில் உள்ள பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்று 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், பேபி அணையை பலப்படுத்தும் பணியை தொடங்க விடாமல் கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

அதேபோல், முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டிவிட்டு, பழைய அணையை இடிக்க வேண்டும் என்றும் கேரள அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, முல்லைப்பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையை நாங்களே கட்டிக்கொள்கிறோம் என்று மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கேரள அரசு கடிதம் எழுதியுள்ளது.

இந்த கடிதத்தை அமைச்சகம், நிபுணர் மதிப்பீட்டு குழுவுக்கு அனுப்பி உள்ளது. இதையடுத்து நாளை மறுநாள் நடக்கவுள்ள நிபுணர் மதிப்பீட்டு குழுவின் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக பரிசீலிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், பலமாக உள்ள அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட துடிக்கும் கேரள அரசை கண்டித்து தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்ப்பில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com