“விசாரணையை தாமதப்படுத்த முயற்சி” - சிறப்பு டி.ஜி.பி மீது தமிழக அரசு குற்றச்சாட்டு

பெண் எஸ்.பி அளித்த பாலியல் புகாரில் விசாரணையை தாமதப்படுத்த முயற்சி செய்வதாக சிறப்பு டி.ஜி.பி மீது தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.
“விசாரணையை தாமதப்படுத்த முயற்சி” - சிறப்பு டி.ஜி.பி மீது தமிழக அரசு குற்றச்சாட்டு
Published on

சென்னை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து தன்னிடம் அத்துமீறிய சிறப்பு டி.ஜி.பி. மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி, தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் அப்போதைய போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் சிறப்பு டி.ஜி.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த புகார் குறித்து விசாரிப்பதற்காக, பணியிடத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு சட்டத்தின்படி, கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 5 பேர் அடங்கிய விசாகா குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தனது விசாரணையை முடித்து கடந்த ஏப்ரல் மாதம் அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிராக குற்ற குறிப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விசாகா குழுவின் விசாரணை நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு டி.ஜி.பி. சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ள கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், ஐ.ஜி அருண் ஆகியோர் தனக்கு எதிராக ஒருதலைபட்சமாக செயல்படுவர் என்பதால் இருவரையும் நீக்க கோரி உள்துறை செயலருக்கு மனு அளித்ததாகவும், இந்த மனு பரிசீலிக்கப்படும் முன்பே விசாரணை துவங்கி விட்டதாகவும் சிறப்பு டி.ஜி.பி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்த போது சிறப்பு டி.ஜி.பி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாகா குழுவின் விசாரணை முடிந்த 10 நாட்கள் ஆன பிறகும், அதன் அறிக்கையை இதுவரை தங்களிடம் வழக்கப்படவில்லை என்றும் குழுவை மாற்றியமைக்கும் கோரிக்கையும் பரிசீலிக்கபடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு குறித்து அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை 22 ஆம் தேதிக்கு(இன்று) தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இதையடுத்து இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஏற்கனவே இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று சிறப்பு டி.ஜி.பி. தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டதாகவும் கூறினார்.

மேலும் விசாகா குழுவில் இடம்பெற்றிருந்த ஐ.ஜி. அருண் மாற்றப்பட்டிருப்பதாகவும், வேண்டுமென்றே தனக்கு எதிரான விசாரணையை தாமதப்படுத்த வேண்டும் என்பதற்காக சிறப்பு டி.ஜி.பி. முயற்சி செய்து வருவதாகவும் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டார். இந்த வழக்கில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சரவணன், விசாகா குழுவின் விசாரணையை பொறுத்தவரை தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டதுடன், இந்த மனுவிற்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com