கோவையில் விநாயகர் சிலையை திருட முயற்சி; கையும் களவுமாக சிக்கிய நபர் கைது!

சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை கோவில் நிர்வாகிகள் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கோவையில் விநாயகர் சிலையை திருட முயற்சி; கையும் களவுமாக சிக்கிய நபர் கைது!
Published on

கோவை,

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த ஜோதிபுரம் அய்யாசாமி கோவில் வீதியைச் சேர்ந்த சதாசிவம் (68), அப்பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோவிலின் நிர்வாகியாக உள்ளார். இவர் மற்றும் சக நிர்வாகி குமாரசாமி, கோவில் அர்ச்சகர்களுடன் நேற்று முன்தினம் இரவு கோவில் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

விநாயகர் சிலை திருட்டு

அப்போது, கோவிலில் இருந்து ஒருவர் வெள்ளை நிற சாக்கு பையை தூக்கிக் கொண்டு சந்தேகத்திற்கிடமாக வெளியே வருவதை கவனித்தனர். உடனே அவரை பிடித்து பையை திறந்து பார்த்தபோது, அதில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலை இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நபரை பிடித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கோவை சங்கனூர் நேரு வீதியைச் சேர்ந்த முருகேசன் மகன் நடராஜன் (54) என்பது தெரியவந்தது.

சிலை பறிமுதல்

இதனைத் தொடர்ந்து நடராஜனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து விநாயகர் சிலையை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com