மின்சார ரெயில்களில் தானியங்கி கதவுகள் பொருத்த வேண்டும் - தயாநிதி மாறன் எம்.பி. கோரிக்கை


மின்சார ரெயில்களில் தானியங்கி கதவுகள் பொருத்த வேண்டும் - தயாநிதி மாறன் எம்.பி. கோரிக்கை
x

கோப்புப்படம்

நெரிசல் மிகுந்த நேரங்களில், புறநகர் ரெயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று தயாநிதி மாறன் எம்.பி. கூறியுள்ளார்.

சென்னை

மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கு, தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

புறநகர் மற்றும் உள்ளூர் ரெயில்களில் அடிக்கடி ஏற்படும் விபத்துகள், உயிரிழப்புகளை தவிர்க்க, தானியங்கி கதவு அமைப்புகளை அமல்படுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். பட்ஜெட் முன்மொழிவுகளுக்கு ஆலோசனைகள் கேட்டபோது மத்திய நிதித்துறை மந்திரியிடம் இந்த பரிந்துரையை முன்வைத்தேன்.

சமீபத்தில் மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ளூர் ரெயிலில் இருந்து தவறி விழுந்ததில் ஒரு ரெயில்வே காவலர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்த பிரச்சினைக்கு அவசர தீர்வு காண்பதின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

ரெயில்வே வாரியம் தற்போது பயணிகளின் பயன்பாட்டில் உள்ள மின்சார ரெயில் பெட்டிகளிலும், இனி புதிதாக உருவாக்கப்படும் மின்சார ரெயில் பெட்டிகளிலும் தானியங்கி கதவுகளுடன் மறு வடிவமைப்பு செய்ய ஒரு விரிவான திட்டத்தை உடனடியாக உருவாக்க வேண்டும். அனைத்து பெருநகரங்களிலும் நெரிசல் மிகுந்த நேரங்களில், புறநகர் ரெயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story