

சென்னை,
குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி காலை 8 மணிக்கு தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் முப்படையினர், காவல்துறையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றார்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில், சென்னையின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் தமிழக அலங்கார ஊர்திகள் இடம் பெற்றன. இதையடுத்து வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், சிறந்த விவசாயிகளுக்கான விருது, காந்தியடிகள் காவல் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை முதல்-அமைச்சர் வழங்கினார்.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் 3 சிறந்த காவல் நிலையங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கவுரவித்தார். இதில் முதல் இடம் பிடித்த திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலையம் சார்பில் ஆய்வாளர் பிச்சையா விருதை பெற்றுக் கொண்டார். 2-ம் இடம் பிடித்த திருவண்ணாமலை தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ஹேமாமாலினி, 3-ம் இடத்தைப் பிடித்த மதுரை மாநகர் E-3 அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் சாதுரமேஷ் ஆகியோர் விருதை பெற்றுக் கொண்டனர்.